சென்னை,
சென்னையில் 116 கிலோ மீட்டர் தொலைவுக்கு 3 வழித்தடங்களில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இதில், கலங்கரை விளக்கம் பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தில் (26 கிலோ மீட்டர்) பூந்தமல்லி போரூர் வரையிலான 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு பணிகள் முடிந்துள்ளது.
இவ்வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்குவதற்கான பாதுகாப்பு சான்றிதழையும் ரெயில்வே வாரியம் வழங்கியது. இதேபோல, போரூர் – வடபழனி இடையில் கடந்த மாதம் 11-ந்தேதி வெற்றிகரமாக சோதனை ஓட்டம் நடத்தி பார்க்கப்பட்டது. இதனால், பூந்தமல்லி – வடபழனி இடையில் மெட்ரோ ரெயிலை இயக்கு வதற்கான அனைத்து சோதனை பணிகளையும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் முழுமையாக முடித்தது.
இதனைத் தொடர்ந்து பூந்தமல்லி – வடபழனி இடையிலான 16 கிலோ மீட்டர் தூரத்துக்கு தென்மண்டல ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஏ.எம்.சவுத்ரி தலைமையிலான குழுவினர் கடந்த ஆய்வு பணிகளை தொடங்கினர். பூந்தமல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து காலை 10 மணிக்கு சோதனை தொடங்கியது.
அய்யப்பன்தாங்கல் நிலையம் முதல் வடபழனி மெட்ரோ நிலையம் வரை மொத்தம் 11 மெட்ரோ நிலையங்கள் உட்பட 8.5 கிலோமீட்டர் தூரம் ஆய்வு மேற்கொண்டனர்.
கடந்த 2 நாட்களாக மின்சாரம், தண்டவாளம் மற்றும் கட்டுமான பணிகள் குறித்த பல்வேறு கட்டமாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மெட்ரோ ரெயிலை அதிவேகத்தில் இயக்கும் சோதனை பிப்ரவரி மாத இறுதியில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
