சென்னை,
நடிகை டாப்ஸி தனது புதிய திரைப்படமான ‘அசி’ க்கு ரசிகர்கள் திரையரங்குகளில் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
வலுவான பெண் கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிப்பதற்கு பெயர் பெற்ற டாப்ஸி, வணிகப் படங்களை விட சமூக கருத்து கொண்ட உள்ளடக்கமுள்ள கதைகளையே அதிகம் விரும்புகிறார். அந்த வரிசையில் தற்போது ‘அசி’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார்.
‘பிங்க்’, ‘முல்க்’ மற்றும் ‘தப்பட்’ போன்ற படங்களின் மூலம் சமூகத்தின் பிரச்சினைகளை கேள்வி எழுப்பிய டாப்ஸி, மீண்டும் ‘அசி’ மூலம் தனது குரலை உயர்த்தப் போகிறார்.
இந்த படம் வருகிற 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ரிலீஸுக்கு முன்பாக, சமூக வலைதளங்களில் உணர்ச்சி்பூர்வமான குறிப்பை பகிர்ந்த டாப்ஸி, அர்த்தமுள்ள கதைகளை கூறும் படங்களுக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
“சிறந்த சினிமாவை விரும்பினால், அதற்கான பொறுப்பையும் பார்வையாளர்கள் ஏற்க வேண்டும். நல்ல உள்ளடக்கமுள்ள படங்களுக்கு பாக்ஸ் ஆபீஸில் ஆதரவு கிடைக்க வேண்டும்,” என்று அவர் தெரிவித்துள்ளார். ’உலக சினிமாவுடன் போட்டியிட வேண்டும் என்றால், முதலில் நம் படங்களை ஆதரிக்க வேண்டும்’ என்றும் அவர் வலியுறுத்தினார்.
