சினிமாவின் உச்சத்திற்கு போனாலும் மக்கள் பணிதான் அவருக்கு முக்கியம்- “அரிசி” பட விழாவில் பேசிய உதயநிதி

மோனிகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் எஸ்.ஏ.விஜயகுமார் இயக்கத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தமிழ்நாடு மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன், நடிகர் சமுத்திரக்கனி இணைந்து நடித்த, இன்றைய சமூகத்தில் உணவின் பின்னாலான அரசியலை, அழுத்தமாக பேசும் படைப்பாக உருவாகி வரும் திரைப்படம் ‘அரிசி’. இப்படத்தின் முழுப் படப்பிடிப்பையும் முடித்த படக்குழு, தற்போது இறுதிக்கட்ட பணிகளைத் துவக்கியுள்ளது.

நம் உணவான அரிசியின் பின்னால் இருக்கும் அரசியலை, விவாசாயத்தின் உண்மைகளை பேசும் அழுத்தமான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் கதையை கேட்டு அசந்துபோன இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தமிழ்நாடு மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன் மற்றும் சமுத்திரக்கனி முதன்முறையாக திரையில் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இவர்களுடன் இயக்குநர் சுப்பிரமணியம் சிவா, சிசர் மனோகர், ரஷ்ய மாயன், பிக்பாஸ் தாமரை,கோவி இளங்கோ, மகிமை ராஜ், பெரம்பலூர் மணி சேகரன், ரமேஷ் மற்றும் மாஸ்டர் ஹரி கிருஷ்ணா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், ‘அரிசி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார் . இவ்விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “இன்று நம்முடைய அண்ணன் முத்தரசன் அவர்கள் நடித்துள்ள திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உங்களையெல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அமைச்சராக நான் பொறுப்பேற்று, கடந்த நான்கு ஆண்டுகளாகத் திரைத்துறை சம்பந்தமாக எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டதே கிடையாது. ஆனால் அண்ணன் முத்தரசன் அவர்கள் அழைக்கும் போது என்னால் அதைத் தட்டிக்கழிக்க முடியவில்லை. தமிழ்நாடு அரசு சார்பாகத் திரைப்பட விருதுகள் பல ஆண்டுகளாகக் கொடுக்கப்படாமல் இருந்தது. கடந்த அ.தி.மு.க ஆட்சியில் 10 ஆண்டுகளாக கொடுக்கப்படாமல் இருந்து, நம்முடைய முதலமைச்சர் அதற்காக ஒரு குழு அமைத்து 2015-லிருந்து 2022-ஆம் ஆண்டு வரைக்கும் திரைப்பட விருதுகளைக் கொடுப்பதற்கான அந்த வாய்ப்பு கிடைத்தது. நான் திரைத்துறையிலிருந்து வெளியே வந்து இன்றைக்கு மக்கள் பணி ஆற்றிக் கொண்டிருக்கிறேன். ஆனால் நம்முடைய, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அண்ணன் முத்தரசன் அவர்கள் இன்றைக்கு மக்கள் பணியிலிருந்து சினிமாவிற்கு அறிமுகம் ஆகியிருக்கிறார்.

அவர் சினிமா துறைக்கு வந்திருந்தாலும், இந்தப் படம் எவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றாலும் நிச்சயம் மக்கள் பணிக்குத்தான் அவர் முதலில் முக்கியத்துவம் கொடுப்பார். அதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் வேண்டாம். அவர் சினிமாவின் உச்சத்திற்குப் போனாலும், தனது பணியின் உச்சத்திற்குப் போனாலும் அவர் எப்போதுமே விரும்புவது மக்களோடு மக்களாக இருப்பதுதான் என்பது தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். அரசியலில் இருந்து சினிமாவிற்கு வந்திருக்கக்கூடிய அண்ணன் முத்தரசன் அவர்களுக்கு நானும் சில காலம் திரைத்துறையில் இருந்தவன், முன்னர் திரைத்துறையில் இருந்தவன் என்கிற வகையில் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்களுக்காகப் பல ஆண்டுகள் களப்போராளியாக உழைத்தவர்தான் அண்ணன் முத்தரசன் அவர்கள். இப்பொழுது திரையிலும் மக்களின் உரிமைகளை பேச வந்திருக்கின்றார். அதுவும் இந்தப் படத்தில் குறிப்பாகச் சிறப்பாக விவசாயியாக அவர் நடித்திருக்கிறார். விவசாயிகளின் உரிமைக்காகக் கம்யூனிஸ்டுகள் களத்தில் இறங்கினால் நிச்சயம் அதில் எப்போதுமே வெற்றி பெற்றிருக்கிறார்கள், இந்த முறையும் வெற்றி பெறுவார்கள். இந்தப் படத்தின் தலைப்பு “அரிசி: உயிரின் மறுபெயர்” என்று வைத்துள்ளார்கள். இந்த அரிசிக்காக ஒரு காலத்தில் மக்கள் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள். பண்ணையார்களிடம் வாழ்க்கை முழுவதும் அடிமையாக இருந்தார்கள். காலமெல்லாம் வயலிலேயே வேலை பார்த்தாலும் அவர்களுக்கு ஒரு நேரச் சாப்பாட்டிற்குக்கூட வழியில்லாமல் இருந்தது. அப்படிப்பட்ட விவசாயத் தொழிலாளர்களின் உரிமைக்காகக் களத்தில் இறங்கிக் கம்யூனிஸ்டுகள் இதுவரைக்கும் எத்தனையோ போராட்டங்களை நடத்தி இருக்கிறார்கள், அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்கள்.

கலைஞர் அவர்கள்தான் 1969-இல் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு ஏழை எளிய மக்களுக்கு அரிசி கிடைப்பதற்கான எல்லா வழிகளையும் செய்து கொடுத்தார். ஒரு படி அரிசிக்காக யாரும் இன்னொருவர் வீட்டு வாசலுக்கு சென்று காத்து நிற்கக் கூடாது என்று அந்த நிலைமையைத் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியவர் டாக்டர் கலைஞர் அவர்கள். இன்னும் சொல்லப்போனால், 2006 சட்டமன்றத் தேர்தலின்போது கலைஞர் அவர்கள் ஒரு தேர்தல் வாக்குறுதியை கொடுத்தார், “இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரசி” என்று முதல் முதலில் அறிவித்தவர் அவர்தான். அதன் அடுத்த கட்டமாகத்தான் இன்றைக்கு விலையில்லா அரிசியும் வழங்கப்படுகின்றது.” என்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

Source link