டி20 உலகக்கோப்பை: ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வெற்றி

புது டெல்லி,

இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் 10-வது ஐ.சி.சி. ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில், இந்த தொடரில் இன்று 3 முக்கிய லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதலில் டெல்லியில் காலை 11 மணிக்கு தொடங்கிய போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் யுஏஇ அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அந்தவகையில், யுஏஇ அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ஆர்யன்ஷ் ஷர்மா, முகமது வாசீம் களம் இறங்கினர். ஆர்யன்ஷ் ஷர்மா ரன் 0(4) ஏதும் எடுக்காமல் விக்கெட்டை பறிகொடுத்தார். மறுபுறம் முகமது வாசீம் 10(6) ரன்னில் அவுட்டானார். தொடர்ந்து களமிறங்கிய அலிஷான் ஷரபு, சோஹைப் கான் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த ஸ்கோர் உயர்ந்தது. அப்போது அலிஷான் ஷரபு 40(31) ரன்களில் இருக்கும்போது தனது விக்கெட்டை இழந்தார்.

பின்னர் வந்த சயீத் ஹைதரும் 13(10) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். அடுத்து வந்த ஹர்ஷித் கௌஷிக், முகமது அர்பான் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாக, மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய சோஹைப் கான் அரைசதம் அடித்து அசத்தினார். இறுதியில் யுஏஇ அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது. அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக சோஹைப் கான் 68(48) ரன்கள் எடுத்தார். ஆப்கானிஸ்தால் தரப்பில் அஸ்மத்துல்லா ஓமர்சாய் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது.

அதிரடி ஆட்டக்காரர் குர்பாஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். எனினும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான இப்ரஹிம் ஜத்ரான் அரசதம் அடித்தார். அவர் 53 ரன்னில் ஆட்டமிழந்தார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தாலும், இறுதியில் ஒமர்சாய் 21 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார்.

இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட் மட்டும் இழந்து இலக்கை கடந்தது. இதன் மூலம் அந்த அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

Source link