தவெக தலைவர் விஜய் நேற்று பரப்புரை செய்தார். பெரம்பூர் தொகுதியில் பரப்புரை செய்த விஜய் விதிகளை மீறியதாக அவர் மீது வழக்கு போடப்பட்டது. இதனைத்தொடர்ந்து தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் கேட்டு டிஜிபிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்
முக்கிய அம்சங்கள்:
விஜய் மீது வழக்கு
தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் கேட்டு கடிதம்
பெரம்பூரில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பரப்புரை செய்ததாகவும் ஐந்து ஒலிபெருக்கியை பயன்படுத்தவே அனுமதிக்கப்பட்ட நிலையில் 30 ஒலிபெருக்கிகளுக்கு மேல் பயன்படுத்தியதாகவும் விஜய்மீது வழக்கு போடப்பட்டுள்ளது. இது தற்போது மேலும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது.
ஒருபக்கம் தவெகவினர் தங்களின் பரப்புரைக்கு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில் தவெகவினர் விதிகளை மீறியதாக அக்கட்சியின் தலைவர் விஜய்யின் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு குறித்து விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியிருக்கிறார் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்.
செய்தியாளர்களை சந்தித்த அர்ச்சனா பட்நாயக், அனைவருக்கும் சரி சமமான அளவில் பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கின்றார். மேலும் விஜய் பரப்புரை செய்த பெரம்பூர் தொகுதியில் என்ன நடந்தது ? அவர் மீது வழக்கு போடுவதற்கான காரணம் என்ன ? என்பது குறித்து விளக்கம் கேட்டு மாவட்ட தேர்தல் அதிகரிக்கும் டிஜிபிக்கும் கடிதம் அனுப்பியிருப்பதாகவும் தெரிவித்தார் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்.
இதையடுத்து விளக்கத்தை கேட்டறிந்த பிறகு வீடியோ ஆதாரங்களை எல்லாம் பார்த்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கையை தலைமை தேர்தல் அதிகாரி எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. பெரவள்ளூர் காவல் நிலையத்தில் ஐந்து பிரிவுகளின் கீழ் விஜய் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. இதனால் தவெகவினர் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.
தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பேசுகையில், இதற்கெல்லாம் எங்கள் தலைவரோ நாங்களோ பயப்படமாட்டோம் என தெரிவித்தார். மேலும் பாதுகாப்பில் பாரபட்சம் இருப்பதாகவும் அவர் நேற்று தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையிலும், பரப்புரைக்கு திமுகவிற்கு கிடைக்கும் அளவிற்கு மற்ற கட்சிகளுக்கு பாதுகாப்பு இல்லை.
பாதுகாப்பில் பாரபட்சம் காட்டப்படுகின்றது என கூறினார். இந்நிலையில் நேற்று பெரம்பூர் தொகுதியில் பாதுகாப்பு நன்றாக தான் இருந்தது. ஆனால் கொளத்தூர் தொகுதியில் சுத்தமாக பாதுகாப்பு இல்லை. முதல்வர் முக ஸ்டாலின் பரப்புரைக்கு மிகப்பெரிய அளவில் பாதுகாப்பு வழங்கிவிட்டு தவெக தலைவர் விஜய்யின் பரப்புரைக்கு பாதுகாப்பு வழங்காமல் இருப்பது சரியல்ல என குற்றம்சாட்டினார் ஆதவ் அர்ஜுனா.
விஜய் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு! காரணம் இது தான்
இதைத்தொடர்ந்து இன்று விஜய் மீது ஐந்து பிரிவில் வழக்கு போடப்பட்டு இருக்கின்றது. தற்போது தலைமை தேர்தல் அதிகாரி விஜய் மீதான வழக்கிற்கு என்ன காரணம் என விளக்கம் கேட்டு இருக்கின்றார். எனவே இந்த வழக்கு குறித்து அவர் நன்கு விசாரித்து பதிலளிப்பார் என எதிர்பார்த்து தவெகவினர் காத்துகொண்டு இருக்கின்றனர்.
