Election Manifesto 2026: தமிழக தேர்தல் அறிக்கைகளில் பெருகும் பெண்களுக்கான வாக்குறுதிகள்.. இது அரசியல் யுக்தியா அல்லது அவசியமா? உண்மையான காரணம் என்ன? – promises for women are increasing in 2026 election manifestos is this political strategy or a necessity what is the real motive

பொதுவாக, ஒவ்வொரு முறை சட்டமன்றத் தேர்தலின் போதும் தமிழகத்தில் போட்டியிடும் கட்சிகள், தேர்தலில் வெற்றி பெற்றால் ஆட்சி காலத்தில் என்னென்ன திட்டங்களைச் செயல்படுத்த போகிறோம் என்பதை தெளிவாக விளக்கி, தேர்தல் வாக்குறுதிகளாக வெளியிடுவார்கள். இந்த தேர்தல் அறிக்கைகள் வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவதற்கும், கட்சியின் தொலைநோக்குப் பார்வை, கொள்கை மற்றும் முக்கிய வாக்குறுதிகளை எடுத்துரைப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த தேர்தல் அறிக்கைகள் வாக்காளர்கள் தங்கள் ஓட்டை யாருக்கு போடலாம் என்பதை முடிவு செய்வதற்கான முக்கிய ஆவணமாகவும், தேர்தல் பிரச்சாரத்தின் முக்கியப் பகுதியாகவும் பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026

அந்த வகையில், வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நடைபெறவுள்ளது. இதையொட்டி, இந்த முறை எப்படியாவது ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்ற துடிப்பில் தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் மும்பரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, முன்பைவிட இந்த முறை தமிழகத்தில் நான்கு முனை போட்டி ஏற்படுவதால், வாக்காளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஒவ்வொரு கட்சியும் முக்கிய வாக்குறுதிகளை வெளியிட்டு உள்ளனர். அவற்றில், பெண்களை மட்டும் மையமாக கொண்ட வாக்குறுதிகள் என்னென்ன என்பதையும், அதற்கான காரணம் என்ன என்பதையும் விரிவாக தெரிந்துக் கொள்வோம்.

திமுக தேர்தல் வாக்குறுதிகள் 2026

திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள பெண்களுக்கான வாக்குறுதிகள்:

(1) கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 லிருந்து ரூ.2000 ஆக உயர்த்தப்படும்

(2) புதுமைப் பெண் திட்டத்தில் மாணவிகளுக்கு உதவித்தொகை ரூ.1,500 ஆக உயர்த்தப்படும்

(3) சுய உதவிக்குழு உறுப்பினராக இருக்கும் பெண்களுக்கு தொழில் முனைவோராக முன்னேற பிணையம் எதுவுமின்றி ரூ.5 லட்சம் மானியத்துடன் வங்கிக் கடன் வழங்கப்படும்

(4) வருமான வரி செலுத்தாத குடும்பங்களை சேர்ந்த இல்லத்தரசிகளுக்கு டிவி, ஃப்ரிட்ஜ், கிரைண்டர், வாஷிங் மிஷின், மிக்சி, மைக்ரோவேவ் அவன், மின் அடுப்புகள் போன்ற வீட்டு உபயோக பொருட்களை வாங்குவதற்கும் அல்லது ஏற்கனவே பயன்படுத்திவரும் பொருட்களை மாற்றவும் ரூ.8,000 கூப்பன் வழங்கப்படும்

அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் 2026

அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள பெண்களுக்கான வாக்குறுதிகள்:

(1) தங்கள் ஆட்சியில் பெண்களுக்கு வழங்கப்பட்டு வந்த தாலிக்குத் தங்கம் மற்றும் திருமண உதவித் திட்டம் தொடர்ந்திட நடவடிக்கை எடுக்கப்படும்

(2) திருமணம் உதவி திட்டத்தின் கீழ் விலையில்லா பட்டு வேட்டி சட்டை, புட்டு சேலைகள் வழங்கப்படும்

(3) கடந்த 2018ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட அம்மா இருசக்கர வாகன திட்டம் மூலம் வேலைக்கு செல்லும் மகளிர் இருசக்கர வாகனம் வாங்க ரூ.25,000 மானியம் வழங்கப்படும்

(4) மகளிர் தனியாகவும் சுய உதவிக் குழுவாகவும் ஒரு லட்சம் சிறு/குறு நிறுவனங்கள் தொடங்க ரூ.10,000 வரை மானிய உதவி வழங்கப்படும்

(5) பெண்களுக்கு ஏற்கனவே உள்ள கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டம் நீட்டிக்கப்படும்

(6) குலவிளக்கு திட்டம் மூலம் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ஒவ்வொரு மாதமும் ரூ.2,000 வழங்கப்படும்

(7) சிறுபான்மை வகுப்பை சேர்ந்த பெண்கள் சுயதொழில் தொடங்க வட்டி இல்லா கடன் வழங்கப்படும்

(8) இல்லத்தரசிகளின் பணி சுமையை குறைக்க அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு குளிப்பதன பெட்டி விலை இல்லாமல் வழங்கப்படும்

(9) பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் வைப்பு நிதியாக வழங்கப்பட்டிருந்த முதலீட்டு தொகை 50 ஆயிரத்தில் இருந்து, ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்

தவெக தேர்தல் வாக்குறுதிகள் 2026

தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள பெண்களுக்கான வாக்குறுதிகள்:

(1) குடும்பத் தலைவி பெண்களுக்கு (60 வயதுக்கு உட்பட்டவர்கள்) மாதம் ரூ.2,500 உதவித்தொகை வழங்கப்படும்

(2) ஏழை குடும்பப் பெண்களின் திருமணத்தின்போது 8 கிராம் தங்கம் + பட்டுப் புடவை வழங்கப்படும்

(3) புதிதாகப் பிறக்கும் பெண் குழந்தைக்கு தங்க மோதிரம் + வரவேற்பு கிட் வழங்கப்படும்

(5) அரசு பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணத்திட்டம் நீட்டிக்கப்படும்

(6) பெண்கள் பாதுகாப்புக்கு தனி பாதுகாப்பு படை / டீம்கள் அமைக்கப்படும்

நாதக தேர்தல் வாக்குறுதிகள் 2026

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள பெண்களுக்கான வாக்குறுதிகள்:

(1) தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு சரிபாதி வேலை வாய்ப்புகள் வழங்கப்படும்

(2) பெண்களுக்கு தனித்தொகுதிகள் உருவாக்கப்படும்

(3) மகளிர் தன்னுதவிக் குழுக்கள் பெற்றிருக்கின்ற அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்யப்படும்

(4) பெண் காவலர்களுக்கு 6 மணி நேர வேலை என்று மாற்றியமைக்கப்படும்

பெண்களுக்கான வாக்குறுதிகள் அரசியல் யுக்தியா? அவசியமா?

தேர்தல் அறிக்கைகளில் பெரும்பாலும் பெண்களை மையப்படுத்தி வாக்குறுதிகளை கொடுப்பதற்கு காரணம், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு முழுவதும் 234 சட்டமன்ற தொகுதிகள் இருப்பதாகவும், கிட்டத்தட்ட 75,000 வாக்குச்சாவடியகள் இருப்பதாகவும், மொத்தமாக 5 கோடியே 67 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த வாக்காளர்களில் 2 கோடியோ 89 லட்சம் (51 விழுக்காடு) பெண் வாக்காளர்களும், 2 கோடியே 77 லட்சம் ஆண் வாக்காளர்களும் உள்ளனர்.

2026 களம் எப்படி அமையும்?- விரிவான அலசல்..!

இதையடுத்து, தமிழ்நாட்டில் ஆண் வாக்காளர்களை காட்டிலும் பெண் வாக்காளர்கள் கிட்டத்தட்ட 12 லட்சம் வாக்காளர்கள் அதிகமாக இருக்கின்றனர். இதுமட்டுமல்லாமல், புள்ளி விவரங்களை ஆராயும் போதும் ஆண்களை விடவும் பெண்களே அதிகளவு வாக்கு செலுத்தி இருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வாக்குறுதிகளும், இலவசங்களும் வாரி வாரி வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

Source link