‘ஐ யம் ஏ டிஸ்கோ டான்ஸர்’ பாடல் மூலம் இந்தியளவில் பிரபலமானவர் பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி. மேற்குவங்கத்தைச் சேர்ந்த மிதுன் சக்கரவர்த்தி, மிர்கயா என்ற திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த நடிகருக்கான தேசிய விருது வென்றார். பாலிவுட் ரசிகர்களிடம் ரொம்பவே பிரபலமான அவர், பாலிவுட்டில் முதன்முறையாக பிரேக் டான்ஸ்-ஐ அறிமுகப்படுத்தியதில் பெரிய பங்கு வகித்தார்.
1982ல் வெளியான டிஸ்கோ டான்ஸர் படத்தில் இடம்பெற்ற ‘ஐ யம் ஏ டிஸ்கோ டான்ஸ்டர்’ பாடலில் மிதுன் சக்கரவர்த்தியின் டான்ஸ் பெரியளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இந்தி மட்டுமில்லாமல் வங்காள மொழி, ஒரியா, போஜ்பூரி, தமிழ் என பல மொழிகளில் 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் மிதுன் சக்கரவர்த்தி. சினிமாவில் நடிக்க வரும் முன்னர் நக்சலைட்டு குழுவில் இணைந்திருந்த மிதுன், வீர விளையாட்டுகளிலும் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். சினிமாவில் பிரபலமான பின்னர் இந்தி நடிகை யோகிதா பாலியை திருமணம் செய்துகொண்டார். சினிமாவை தொடர்ந்து அரசியலிலும் வலம் வருகிறார்.
இந்த நிலையில், இந்தித் திரையுலகில் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ள மிதுன் சக்கரவர்த்திக்கு, தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
74வது வயதான மிதுன் சக்கரவர்த்தி, தற்போது பாரதிய ஜனதா கட்சியில் உள்ளார். முன்னாள் ராஜ்யசபா எம்பியான மிதுன் சக்கரவர்த்தியின் கலை சேவையை பாராட்டி தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 8ம் தேதி நடைபெறும் தேசிய திரைப்பட விழாவில், மிதுன் சக்கரவர்த்திக்கு தேசிய விருது வழங்கப்படவுள்ளது. இதுவரை 3 தேசிய விருதுகள் உட்பட பல விருதுகள் வென்றுள்ள மிதுன் சக்கரவர்த்தி, தற்போது தாதா சாகேப் பால்கே விருது பெறவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தற்போது மிதுன் சக்ரவர்த்திக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய சினிமாவிற்கு நடிகர் மிதுன் சக்ரவர்த்தியின் ஈடு இணையற்ற பங்களிப்பை அங்கீகரித்து அவருக்கு மதிப்புமிக்க தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், மிதுன் சக்ரவர்த்தி ஒரு கலாவ்வார சின்னம் என்றும், அவரது பல்துறை நடிப்பிற்காக தலைமுறைகள் கடந்து போற்றப்படுவார் என்றும் கூறி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

