LSG vs KKR: முகுல் சௌத்ரி தனி ஒருவனாக லக்னௌவை வெல்லச் செய்தது எப்படி? ஐபிஎல்லின் இந்த புதிய நாயகன் யார்?

லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் வெற்றி பெற கடைசி 4 ஓவர்களில் 54 ரன்கள் தேவை.

மிட்செல் மார்ஷ், எய்டன் மார்க்ரம், நிகோலஸ் பூரன், ரிஷப் பன்ட் என முன்னணி வீரர்கள் அனைவரும் அவுட்டாகி பெவிலியனில் அமர்ந்திருந்தார்கள். கைவசம் இருந்ததோ 3 விக்கெட்டுகள் மட்டுமே.

எஞ்சியிருந்தது, தன் மூன்றாவது ஐபிஎல் போட்டியில் ஆடும் முகுல் சௌத்ரியும் பின் வரிசையில் எஞ்சியிருந்த பௌலர்களும் மட்டுமே.

இப்படியொரு நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இந்த சீசனில் தங்களின் முதல் வெற்றியைப் பெற்றுவிடும் என்றே கருதப்பட்டது.

ஆனால், எதிர்பாராத ஒன்றை அரங்கேற்றிக்காட்டினார் முகுல் சௌத்ரி. 27 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 54 ரன்கள் எடுத்து தனி ஆளாக லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸுக்கு வெற்றி தேடித் தந்தார் அந்த 21 வயது ராஜஸ்தான் இளைஞர்.

ஈடன் கார்டன்ஸில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 181 ரன்கள் எடுத்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கடைசிப் பந்தில் தோற்று தங்கள் மூன்றாவது தோல்வியை பதிவு செய்தது.

அவர்களுக்கு அந்த தோல்வியைப் பரிசளித்த முகுல் சௌத்ரி யார்? எப்படி இந்த வெற்றியை அவர் சாத்தியப்படுத்தினார்?

தோல்வியின் விளிம்பில் நின்றிருந்த சூப்பர் ஜெயின்ட்ஸ்

ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பேட்டிங் செய்வது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. வேகப்பந்துவீச்சாளர்கள் ஸ்லொயர் பால்கள் வீசியது பேட்டர்களுக்கு சவாலாக விளங்கியது. ஆங்காங்கே காய்ந்த பகுதிகள் அதிகம் இருந்ததால், அது ஸ்பின்னர்களுக்கும் சாதகமாகவே இருந்தது. அதனால் தான், இரண்டு அணிகளுமே மிடில் ஓவர்களில் நல்ல வேகத்தில் ரன் சேர்க்கத் தடுமாறின.

181 ரன்களை சேஸ் செய்த லக்னௌ நான்காவது ஓவரில் இருந்து தடம்புரண்டது. முதல் 4 ஓவர்களில் விக்கெட் இழக்காமல் 41 ரன்கள் எடுத்திருந்த அந்த அணி, அடுத்த 8.5 ஓவர்களில் 63 ரன்கள் மட்டும் எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்தது.

நைட் ரைடர்ஸின் ஸ்பின்னர்கள், வேகப்பந்துவீச்சாளர்கள் என அனைவருமே அந்தக் கட்டத்தில் சிறப்பாகப் பந்துவீசினார்கள். ரிஷப் பன்ட், நிகோலஸ் பூரன் போன்ற அதிரடி வீரர்களால் கூட பெரிய ஸ்கோர் எடுக்க முடியவில்லை.

ஆயுஷ் படோனி மட்டும் ஓரள்வு தாக்குப்பிடித்து விளையாடி அரைசதம் அடித்தார். ஆனால் அவரும் 54 ரன்கள் எடுத்த நிலையில் 15வது ஓவரில் வெளியேறினார்.

16வது ஓவரை வீசவந்த சுனில் நரைன் அந்த ஓவரில் வெறும் 1 ரன் மட்டுமே கொடுத்து ஷமியின் விக்கெட்டையும் கைப்பற்றினார். அதனால், 4 ஓவர்களில் 54 ரன்கள் தேவை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது லக்னௌ.

மீதமிருக்கும் 4 ஓவர்களை வீசக்கூடிய வைபவ் அரோரா, கார்த்திக் தியாகி, கேமரூன் கிரீன் போன்ற பௌலர்கள் அனைவரும் ஏற்கெனவே சிறப்பாகப் பந்துவீசி விக்கெட் வீழ்த்தியிருந்ததால் இது கொல்கத்தாவின் ஆட்டமாகவே கருதப்பட்டது.

முகுல் சௌத்ரியின் அதிரடி அரங்கேறியது லக்னௌ அணி இப்படி தோல்வியின் விளிம்பில் நின்றிருந்தபோதுதான்.

படக்குறிப்பு, 21 வயதான ராஜஸ்தான் வீரரான முகுல் சௌத்ரியை ஐபிஎல் ஏலத்தில் வாங்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் முயற்சி செய்தது (கோப்புப் படம்)

நெருக்கடிக்கு மத்தியில் தைரியம் காட்டிய முகுல்

லக்னௌ அணி சன்ரைசர்ஸுக்கு எதிராக விளையாடிய முந்தைய போட்டியில் முகுல் சௌத்ரி நெருக்கடியை சந்தித்திருந்தார். அந்த அணி வெற்றி பெற 9 பந்துகளுக்கு 9 ரன்கள் தேவை என்ற முக்கியமான நிலையில், 19வது ஓவரின் கடைசி 3 பந்துகளை சந்தித்த அவரால் ஒரு ரன் கூட அடிக்க முடியவில்லை. அப்போதே அணியின் கேப்டன் ரிஷப் பன்ட் அவரை ஆசுவாசப்படுத்திய காட்சிகளைப் பார்க்க முடிந்தது. அதன்பிறகு தான் இந்தப் போட்டியில் களமிறங்கினார் முகுல்.

கொல்கத்தாவுக்கு எதிரான முகுல் சௌத்ரியின் இன்னிங்ஸ் தொடங்கியதுமே நெருக்கடியில் தான். மிகச் சிறப்பாக பந்துவீசிக் கொண்டிருந்த சுனில் நரைன் வீசிய, தனது அணியின் 15வது ஓவரை சந்தித்தார் அவர். நரைனின் அனுபவ சுழலை அவரால் கையாள முடியவில்லை. அந்த ஓவரின் முதல் 3 பந்துகளிலும் அவரால் ரன் எடுக்க முடியவில்லை. அதிலும் இரண்டு பந்துகளை அவரால் தொடக்கூட முடியவில்லை. ஒருவழியாக நான்காவது பந்தில் அவரால் சிங்கிள் எடுக்க முடிந்தது.

இதன்பிறகு முகுல் சௌத்ரியின் ஆட்டம் முற்றிலும் மாறியது. கொல்கத்தா வேகப்பந்துவீச்சாளர்கள் பந்துவீச வந்ததும் விஸ்வரூம் எடுத்தார் அவர். அடுத்த 24 பந்துகளில் அவர் சந்தித்தது 21 பந்துகள். அதில் 2 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள். 10 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காத அவர், ஒற்றை ரன் 2 முறை எடுத்தார். அந்த சிங்கிள்கள் ஸ்டிரைக் ரொடேட் செய்வதற்காக எடுக்கப்பட்டவை. அந்த டாட் பால்களுமே கூட அவர் ஸ்டிரைக்கை தக்கவைப்பதற்காக எடுத்தவை. தான் களத்தில் நின்று ஆட்டத்தை முடிக்கவேண்டும் என்பதில் மிகவும் தீர்க்கமாக இருந்தார் முகுல்.

17வது ஓவரின் முதல் பந்தில் பெரிய ஷாட் அடிக்க முயற்சி செய்தார் முகுல். ஆனால், அது பேக்வேர்ட் ஸ்கொயர் திசையில் நின்றிருந்த ஃபீல்டர் கைக்கு சென்றது. எளிதாக ஒரு ரன் எடுத்திருக்கலாம். ஆனால், முகுல் சௌத்ரி அதை நிராகரித்தார்.

ஆம், கைவசம் 3 விக்கெட்டுகள் இருந்த நிலையிலும் ஓவரின் முதல் பந்திலேயே அவர் சிங்கிளை நிராகரித்தார். அதுவும், சிங்கிள் நிராகரிப்பு ஒரு போட்டியின் முடிவைத் தீர்மானித்த அடுத்த 24 மணி நேரங்களுக்குள் அதைச் செய்தார். டேவிட் மில்லரின் பெயரும், குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான கடைசி ஓவரில் அவர் எடுத்த அந்த முடிவும் தொடர்ந்து பேசப்பட்டுக்கொண்டிருக்கும் அந்த சூழ்நிலையில் அனுபவமற்ற ஒரு 21 வயது இளைஞர் அப்படியொரு முடிவை எடுத்தது அனைவருக்கும் ஆச்சர்யமாக இருந்தது.

ஆனால், முகுல் சௌத்ரி தன் திறமை மீது வைத்திருந்த நம்பிக்கையை முழுமையாக செய்தும் காட்டினார். சிங்கிள்களை மறுத்து ஸ்டிரைக்கைத் தொடர்ந்த அவர், அதை சிறப்பாகப் பயன்படுத்தி பவுண்டரிகளும், சிக்ஸர்களுமாக அடித்தார்.

போட்டிக்குப் பிறகு பேசிய அவர், “கடைசி வரை ஆடினால் என்னால் ஆட்டத்தை முடிக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. பந்துவீச்சாளர் நான்கு பந்துகளைச் சரியாக வீசினாலும், ஒரு பந்தாவது எனது ஸோனுக்குள் (zone) வரும் என்பதுதான் எனது எண்ணமாக இருந்தது. சிக்ஸர் அடிக்க எனக்கு ஒரே ஒரு பந்து போதும். அந்தப் பந்துக்காக நான் காத்திருந்தேன். அது கடைசிக்கு முந்தைய பந்தாகவோ அல்லது கடைசி பந்தாகவோ கூட இருக்கலாம். ஆனால் அது எனக்குக் கிடைக்கும் என்று எனக்குத் தெரியும்.” என்று அவர் கூறினார். அந்த நம்பிக்கைக்கு ஏற்பவே அனைத்தும் நடந்தது.

ஹெலிகாப்டரில் தொடங்கிய அதிரடி

வைபவ் அரோராவின் அந்த 17வது ஓவரில் அடுத்தடுத்து ஒரு பவுண்டரியும், ஒரு சிக்ஸரும் அடித்தார். அதிலும் அந்த சிக்ஸர்… யார்க்கர் லென்த்தில் போடப்பட்ட பந்தை மஹேந்திர சிங் தோனி போல் ஹெலிகாப்டன் ஷாட் மூலம் சிக்ஸராக்கினார் அவர். அதை அவர் அநாயசமாகவும் அடித்தார்.

அடுத்த ஓவரை வீச வந்த கார்த்திக் தியாகியை முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து வரவேற்றார் அவர். ஆஃப் சைட் வைட் லைனுக்கு வெளியே வீசப்பட்ட பவுன்சர் பந்து அது. அதுவும் பெரிதாக வேகம் இல்லாத பந்து. அந்தப் பந்தை பெரும்பலம் கொடுத்து அடித்து லாங் ஆஃப் திசையில் சிக்ஸராக்கினார். நான்காவது பந்து ஃபுல் டாஸாக வீசப்பட அதையும் சிக்ஸராக்கினார் அவர்.

கிரீன் வீசிய 19வது ஓவரில் 2 சிக்ஸர்களும், 1 பவுண்டரியும் அவர் பேட்டில் இருந்து வந்தது. மார்பளவு உயரத்துக்கு வந்த பந்தையும், ஆஃப் சைட் வெளியே வீசப்பட்ட பந்தையும் லெக் சைட் நன்கு பலமாக அடித்து சிக்ஸர்களாக்கினார் அவர்.

17வது மற்றும் 18வது ஓவர்களின் ஐந்தாவது பந்தில் சிங்கிள் எடுத்து அடுத்த ஓவருக்கு ஸ்டிரைக்கைத் தக்கவைத்துக்கொண்ட முகுல், 19வது ஓவரில் மட்டும் அதைச் செய்யவில்லை. கிரீன் வீசிய முதல் 4 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே கிடைத்ததால், கடைசி 2 பந்துகளையும் கூட பயன்படுத்திக் கொள்வது என்ற முடிவுக்கு வந்தார். அந்த 2 பந்துகளிலும் 10 ரன்கள் எடுத்து அதை நிறைவேற்றியும் கொண்டார் அவர்.

கடைசி ஓவரில் எல்எஸ்ஜி வெற்றிக்கு 14 ரன்கள் இருந்தால் போதும் என்ற நிலை வந்தது. கடைசி ஓவரின் முதல் பந்தை சந்தித்த ஆவேஷ் கான், சிங்கிள் எடுத்து மறுபடியும் முகுல் சௌத்ரியை ஸ்டிரைக்குக்கு கொண்டுவந்தார். அடுத்த பந்தை அவர் சிக்ஸராக்க, 4 பந்துகளில் 7 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.

மூன்றாவது பந்தை வைபவ் அரோரா யார்க்கராக வீசினார். நான்காவது பந்து… முகுல் சௌத்ரி ஆஃப் சைட் நன்கு விலகிவர, அவர் நகர்வுக்கு ஏற்றதுபோன்ற ஒரு யார்க்கரை வீசினார் வைபவ். அதுவும் டாட் பால் ஆனது.

2 பந்துகளில் 7 ரன்கள் தேவை என்ற நிலை. மீண்டும் அவுசைட் ஆஃப் ஸ்டம்ப் லைனில் யார்க்கர் போட முயற்சித்தார் வைபவ். யார்க்கர் சற்று தவற, வலது காலை மண்டியிட்டு, நன்கு ஆஃப் சைட் பேட்டை சுழற்றி அந்தப் பந்தை கவர் திசையில் சிக்ஸராக்கினார் முகுல் சௌத்ரி. மிகவும் கடினமான ஒரு பந்தை அவர் அடித்த விதம் அனைவரையும் பிரம்மிக்கவைத்தது.

கடைசிப் பந்தில் 1 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், ‘பை’ மூலம் அந்த ரன் வந்துவிட லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் வெற்றி வசப்பட்டது. முகுல் சௌத்ரி தனி ஆளாக அதை வசப்படுத்தினார்.

ஈஎஸ்பிஎன் செய்தியின்படி, இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பாக நடந்த பயிற்சி முகாமின்போது முகுல் சௌத்ரி பற்றி கேப்டன் ரிஷப் பன்டிடம் லக்னௌ அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் “அவருக்கு (முகுல்) விருப்பம் இருந்தால்… அடுத்த நான்கு மாதங்களில், அவரை இந்தியாவின் மிக பயங்கரமான (எதிரணிகளை அச்சுறுத்தும்) 6-வது அல்லது 7-வது வரிசை பேட்டராக நான் மாற்றுவேன்.” என்று கூறியுளள்ர்.

அப்போதே தன் பயிற்சியாளரின் நம்பிக்கையை சம்பாதித்தவர், தற்போது லாங்கரின் திட்டத்தை நோக்கியும் ஒரு பெரிய அடியை எடுத்து வைத்திருக்கிறார்.

படக்குறிப்பு, முதலில் மிதவேகப்பந்துவீச்சாளராக இருந்த முகுல் சௌத்ரி, பின்னர் விக்கெட் கீப்பர் பேட்டராக மாறினார் (கோப்புப் படம்)

யார் இந்த முகுல் சௌத்ரி?

ராஜஸ்தானைச் சேர்ந்தவரான முகுல் சௌத்ரி 2004-ஆம் ஆண்டு பிறந்தவர். முதலில் மிதவேகப் பந்துவீச்சாளராக இருந்தார். ஒரு போட்டியில் தன் அகாடெமி அணிக்கு விக்கெட் கீப்பர் தேவைப்பட்ட நிலையில் அந்தப் பணியை முகுல் செய்தார். இறுதியில் அவர் ஒரு விக்கெட் கீப்பர் பேட்டராகவே மாறிவிட்டார்.

முகுல் சௌத்ரி 12-13 வயது இருக்கும்போது அவர் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார். அவர் பிறந்த ஜுன்ஜுனுவில் அதிகமான கிரிக்கெட் அகாடமிகள் இருக்கவில்லை. அதனால் 5-6 ஆண்டுகள் பயிற்சிக்குப் பிறகு அவர் ஜெய்ப்பூருக்கு சென்று பயிற்சி செய்யத் தொடங்கினார். கடந்த 4 ஆண்டுகளாக அவர் அங்குதான் பயிற்சியெடுத்து வருகிறார்.

டி20 கிரிக்கெட் வேகமாக வளர்ந்து வருகிறது என்பதைப் உணர்ந்து, அதிக போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதற்காக கூர்கானுக்குச் சென்று அங்கு 3-4 மாதங்கள் தங்கி போட்டிகளில் விளையாடினார்.

இவர் கடந்த 2023-ஆம் ஆண்டு அவர் ராஜஸ்தான் அணிக்காக ரஞ்சிக் கோப்பையில் அறிமுகமானார். அதே ஆண்டு சையது முஸ்தாக் அலி தொடரிலும் விளையாடும் வாய்ப்பைப் பெற்றார்.

2025-ஆம் ஆண்டு நடந்த 23 வயதுக்குட்பட்டோருக்கான மாநில அளவிலான 50 ஓவர் போட்டியில் அவர் மிகச் சிறப்பாக செயல்பட்டார். விஸ்டன் செய்தியின்படி அவர் அந்தத் தொடரில் 103 என்ற சராசரியில் 617 ரன்கள் குவித்தார். அந்தத் தொடரில் 600 ரன்களுக்கும் மேல் அடித்த ஒரே வீரர் அவர்தான். 142 என்ற ஸ்டிரைக் ரேட்டில் பெரும் அதிரடி காட்டிய அவர் அந்தத் தொடரில் 34 சிக்ஸர்களும் அடித்தார்.

அது அவருக்கு சையது முஸ்தாக் அலி தொடருக்கான அணியில் அவருக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. அந்தத் தொடரில் 5 இன்னிங்ஸ்கள் ஆடிய அவர், 198.85 என்ற சராசரியில் 173 ரன்கள் விளாசினார். தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆடிவரும் கார்த்திக் ஷர்மா அந்தத் தொடரின் போது காயமடைய அவருக்குப் பதிலாக மாற்று வீரராகத்தான் முகுல் சௌத்ரி அணியில் இடம்பிடித்தார். அடுத்து விளையாடிய 5 போட்டிகளில் அவர் தன் முத்திரையையும் பதித்தார்.

அந்த சையது முஸ்தாக் அலி தொடரிலும் இதேபோல் ஒரு போட்டியைத் தனி ஆளாக முடித்துக்கொடுத்தார் முகுல். தோல்வியின் விளிம்பில் ராஜஸ்தான் இருக்க, ஆட்டமிழக்காமல் 26 பந்துகளில் 62 ரன்கள் விளாசி கடைசிப் பந்தில் அவர் போட்டியை வென்று கொடுத்தார். டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியின்படி, கடைசி ஓவரில் 25 ரன்கள் தேவைப்பட, ஆயுஷ் படோனி வீசிய அந்த ஓவரில் 5 சிக்ஸர்கள் விளாசியிருக்கிறார் முகுல்.

இதன்பிறகு நடந்த ஐபிஎல் 2026 தொடருக்கான ஏலத்தில் இவருக்கு நல்ல கிராக்கி இருந்தது. மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் அவருக்காகப் போட்டியிட, கடைசியில் 2.6 கோடி ரூபாய்க்கு முகுல் சௌத்ரியை வாங்கியது எல்எஸ்ஜி.

கனவு நனவானது

தற்போது அனைவரின் கவனத்தையும் பெற்றிருக்கும் முகுல் சௌத்ரிக்கு அவர் தந்தை மிகப் பெரிய உந்துசக்தியாக இருந்திருக்கிறார். சொல்லப்போனால், முகுல் சௌத்ரி கிரிக்கெட் வீரர் ஆகவேண்டும் என்று அவர் பிறப்பதற்கு முன்பே முடிவு எடுத்திருக்கிறார் அவரது தந்தை தலிப் குமார் சௌத்ரி.

இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற முகுல் சௌத்ரி தன் தந்தை பற்றியும், தன் குடும்பத்தைப் பற்றியும் பேசினார். “உண்மையில் எனது பயணம் நான் பிறப்பதற்கு முன்பே தொடங்கிவிட்டது. ஒரு நாள் தனது மகன் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பது எனது தந்தையின் கனவு. ஆனால் அப்போது எங்கள் குடும்ப நிலைமை அவ்வளவு வலுவாக இல்லை, அதனால் என்னால் சீக்கிரமாக விளையாட்டைத் தொடங்க முடியவில்லை. நான் சுமார் 12-13 வயதில் விளையாடத் தொடங்கினேன்.” என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், “உத்தர பிரதேசத்துக்கு எதிரான ஒரு 19 வயதுக்குட்பட்டோர் போட்டியின் போதுதான் நான் சாதிப்பேன் என்ற நம்பிக்கை தனக்கு வந்தது என்று என் தந்தை என்னிடம் சொல்வார். அது ஒரு குறைந்த ரன்கள் எடுக்கப்பட்ட போட்டி, அந்தப் போட்டியில் வேறு யாரும் சரியாக விளையாடவில்லை, ஆனால் நான் ரன்கள் எடுத்தேன். அன்றுதான் என்னால் சாதிக்க முடியும் என்று அவருக்கு நம்பிக்கை வந்தது.” என்றும் கூறினார்.

முன்பொருமுறை ஜியோஹாட்ஸ்டாருக்குக் கொடுத்த பேட்டியில் முகுல் சௌத்ரி “நான் எப்போதும் எம்.எஸ். தோனி சாரைத்தான் ரோல் மாடலாகப் பார்க்கிறேன். ஏனென்றால் நானும் ஒரு விக்கெட் கீப்பர், அதனால் அவரைப் பார்த்துதான் வளர்ந்தேன். குறிப்பாக அந்த ஹெலிகாப்டர் ஷாட்… எனது சிறுவயதில் 2011 உலகக் கோப்பையில் அதைப் பார்த்தது எனக்கு இன்னும் அப்படியே நினைவிருக்கிறது. அவர்தான் எனது ரோல் மாடல். அவரைப் போலவே நானும் ஒரு பினிஷர். போட்டிகளை வெற்றிகரமாக முடிப்பதில் அவர் எனக்கு ஒரு பெரிய முன்மாதிரி.” என்று கூறியிருந்தார்.

தன் ரோல் மாடலைப் போலவே தானும் செயல்பட்டிருக்கிறார் முகுல் சௌத்ரி… ஹெலிகாப்டர் ஷாட் மூலம் சிக்ஸரும் அடித்திருக்கிறார், தன் அணிக்குப் போட்டியும் வென்றுகொடுத்திருக்கிறார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Source link