படக்குறிப்பு, ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ் இரு அணிகளுமே தங்களின் கடைசிப் போட்டியில் தோற்றிருக்கின்றன (கோப்புப் படம்)
10 நிமிடங்களுக்கு முன்னர்
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
ஐபிஎல் 2020 சீசனின் 20வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மும்பை வான்கெடே மைதானத்தில் மோதுகின்றன.
இரண்டு அணிகளுமே தங்களின் முந்தைய போட்டியில் தோற்றிருப்பதால் இந்தப் போட்டியில் வென்று வெற்றிப் பாதைக்குத் திரும்பும் முனைப்பில் இருப்பார்கள்.
டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
கடந்த போட்டியில் ஆர்சிபி அணிக்குக் கம்பேக் கொடுத்த ஜாஷ் ஹேசில்வுட் இந்தப் போட்டியில் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக ஜேக்கப் டஃபி மீண்டும் அணியில் இடம்பிடித்தார்.
டாஸில் என்ன நடந்தது?
டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா, “நாங்கள் முதலில் பந்துவீசப் போகிறோம். ஆடுகளம் நன்றாகத் தெரிகிறது. முதல் போட்டியை வேறொரு ஆடுகளத்தில் விளையாடினோம், இதுவும் அதைப் போலவே இருக்கிறது. இங்கு இரண்டாவதாக பேட்டிங் செய்வது எப்போதும் நல்லது. இது ஒரு முக்கியமான ஆட்டம் என்று நினைக்கிறேன். களமிறங்கி எங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும், ஆலோசனைக் கூட்டங்களில் பேசிய விஷயங்களைச் சரியாகச் செய்ய வேண்டும் என்றும் விளையாட்டை ரசித்து விளையாட வேண்டும் என்று விரும்புகிறோம்.
நாங்கள் நல்ல ஆடுகளங்களைக் கேட்டிருந்தோம், அவை எங்களுக்குக் கிடைத்து வருகின்றன. ஒரு பந்துவீச்சாளராக பந்தைச் சரியான இடத்தில் வீசும் வரை, மற்றும் ஒரு பேட்டராகச் சரியான ஷாட்டுகளை விளையாடும் வரை, நீங்கள் போட்டியில் நிலைத்திருக்க முடியும். வான்கெடே மைதானத்தில் பல ஆண்டுகளாக, இலக்கைத் துரத்துவது பல அணிகளுக்குச் சாதகமாக இருந்துள்ளது. இது எங்களது சொந்த மைதானம் என்பதால், பிறகு பனிப்பொழிவும் இருக்கும். எனவே, எவ்வளவு ரன்களைத் துரத்த வேண்டும் என்பது தெரிந்தால், அதற்கு ஏற்ப இன்னிங்ஸைத் திட்டமிடலாம்.” என்று கூறினார்.
ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார், “நிச்சயமாக, நாங்கள் முதலில் பந்துவீசவே விரும்பியிருப்போம். ஆனால் உங்கள் அனைவருக்கும் தெரிந்தபடி, இது பேட்டிங் செய்வதற்குச் சாதகமான ஒரு ஆடுகளம். பந்து நன்றாகப் பேட்டிற்கு வருகிறது, அதே சமயம் நல்ல பவுன்ஸும் இருக்கிறது. எனவே உண்மையைச் சொன்னால், இது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது. நாங்கள் ஒரு நல்ல ஸ்கோரை எடுத்து, அவர்களை அழுத்தத்தில் வைக்க முயற்சிப்போம்.
இது எங்களது நான்காவது போட்டி. கடந்த சில போட்டிகளில் நாங்கள் விளையாடிய விதம் நிறைய நேர்மறையான விஷயங்களைக் கொடுத்துள்ளது. கடந்த போட்டியில், நாங்கள் 97 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தும், 200 ரன்களுக்கு மேல் எடுத்தோம். அது எங்களுக்கு ஒரு நல்ல அறிகுறி. நாங்கள் இங்கு விளையாடுவதை மிகவும் ரசிக்கிறோம். எப்போது இங்கு வந்தாலும், சிறப்பான கூட்டத்தைப் பார்க்கிறோம். இது சவாலானது, அதே நேரத்தில் வேடிக்கையாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது.” என்றார்.
பிளேயிங் லெவனில் யார்?
மும்பை இந்தியன்ஸ்
இந்தப் போட்டிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டு மாற்றங்களை செய்தது. அல்லா கசன்ஃபர் மற்றும் தீபக் சஹர் ஆகியோருக்குப் பதிலாக மிட்செல் சேன்ட்னர் மற்றும் மயாங்க் மார்க்கண்டே பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டனர்.
பிளேயிங் லெவன்: ரியான் ரிக்கில்டன் (விக்கெட் கீப்பர்), ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), நமன் திர், மிட்செல் சான்ட்னர், ஷார்துல் தாக்கூர், டிரென்ட் போல்ட், ஜஸ்ப்ரித் பும்ரா, மயாங்க் மார்க்கண்டே
சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: ராகுல் ஷர்மா, அஷ்வனி குமார், ராஜ் பவா, கார்பின் பாஷ், ஷெர்ஃபேன் ரதர்ஃபோர்ட்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
கடந்த போட்டியில் ஆடிய வேகப்பந்துவீச்சாளர் ஜாஷ் ஹேசில்வுட்டுக்குப் பதிலாக ஜேக்கப் டஃபி மீண்டும் ஆர்சிபி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பிளேயிங் லெவன்: விராட் கோலி, ஃபில் சால்ட், தேவ்தத் படிக்கல், ரஜத் பட்டிதார், டிம் டேவிட், ஜித்தேஷ் ஷர்மா, ரொமாரியோ ஷெபர்ட், குருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜேக்கப் டஃபி, சுயாஷ் ஷர்மா.
சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: ராசிக் தார், ஸ்வப்னில் சிங், ஜேக்கப் பெதெல், மங்கேஷ் யாதவ், வெங்கடேஷ் ஐயர்.
2026 சீசனில் இதற்கு முன்
இந்த சீசனில் இந்தப் போட்டிக்கு முன் ஆடிய 3 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான முதல் போட்டியில் வென்ற அந்த அணி, அதன்பிறகு டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு எதிராக தோல்வியடைந்தது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தங்களின் முதலிரு போட்டிகளிலும் முறையே சன்ரைசர்ஸ் ஹைதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளை வீழ்த்தியது. மூன்றாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராகத் தோல்வியைத் தழுவியது.
