காங்கிரஸ்கட்சி மட்டும் இன்னும் பாக்கியுள்ளது, இன்று மாலை இறுதி முடிவை அறிவிப்போம் என்றும் தெரிவித்தார் டி.ஆர் பாலு. காங்கிரஸ் கட்சியை தவிர மற்ற கட்சிகளின் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடைந்து தொகுதிகள் இறுதியானதாக தெரிகின்றது. தொகுதிகளின் எண்ணிக்கை குறித்தே திமுக மற்றும் காங்கிரஸ் இடையே பல கருத்து வேறுபாடுகள் இருந்து வந்ததாக கூறப்பட்டது.
ஒருகட்டத்தில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறவும் வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் இந்த பேச்சுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி இணைந்தது. கடந்த முறையை விட காங்கிரஸ் கட்சிக்கு சற்று அதிகமான தொகுதிகளை திமுக வழங்கினார்கள். இதற்கிடையில் தற்போது எந்தெந்த தொகுதிகள் என்பதை இறுதி செய்யும் பேச்சுவார்த்தையிலும் இழுபறியான நிலை ஏற்பட்டு இருப்பதாக தெரிகின்றது.
கிட்டத்தட்ட காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 28 தொகுதிகள் முடிவாகிவிட்டதாம். ஒரு சில தொகுதிகள் மட்டும் இழுபறியாக போய்க்கொண்டு இருக்கின்றதாம். ஆனால் அதுவும் இன்று மாலைக்குள் முடிவாகிவிடும் என சொல்லப்படுகின்றது. திமுககூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சிகளிடையே பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில் காங்கிரஸ் கட்சியிடம் மட்டும் இன்னும் பேச்சுவார்த்தை முடியாமல் உள்ளது.
டி.ஆர் பாலு இதனை செய்தியாளர்களிடம் அறிவித்தார்.இந்நிலையில் திமுகவின் ஒரு தொகுதியை காங்கிரஸ் விடாப்பிடியாக கேட்டு வருவதாக சொல்லப்பட்டது. அதுமட்டுமல்லாமல் திமுகவின் எழும்பூர் தொகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை போட்டியிட விரும்புவதாக சொல்லப்பட்டது.
ஆனால் இந்த தகவலை செல்வப்பெருந்தகை மறுத்தார். இருந்தாலும் திமுகவின் விருப்பப்பட்டியலில் இருக்கும் ஒரு தொகுதிக்காக தான் இரு கட்சியினரிடையே பேச்சுவார்த்தை நீடித்து வருகின்றதாம். அதிலும் சென்னையில் இருக்கும் ஒரு தொகுதியை காங்கிரஸ் கேட்டு வருவதாக சொல்லப்படுகின்றது.
எனவே சென்னையில் இருக்கும் ஒரு தொகுதிக்காக தான் இரு கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருவார்கள் என கணிக்கப்படுகின்றது. இந்த கணிப்பெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும் இன்று மாலைக்குள் தொகுதிகள் மற்றும் திமுகவின் வேட்பாளர்கள் பட்டியலையும் முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளியிடுகிறார் என தகவல் கிடைத்துள்ளது.
இதனைத்தொடர்ந்து இன்று மாலைக்குள் காங்கிரஸ் தொகுதிகள் உறுதிசெய்யப்படும் என எண்ணியிருந்த நிலையில் தற்போதே பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவடைந்து இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இன்னும் சற்று நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் 28 தொகுதிகள் என்னென்ன என்பதனை முதலமைச்சர் முக ஸ்டாலின் அதிகாரபூர்வமாக அறிவிப்பார்.அதனைத்தொடர்ந்து எந்த தொகுதிக்காக பேச்சுவார்த்தை இழுபறியாக இருந்தது என்பது குறித்து மிக விரைவில் தெரிய வரும்.மேலும் வேட்பாளர்களின் தொகுதிகள் மாற்றப்பட்டதா என்பது குறித்தும் தெரிய வரும்.
