இப்போதெல்லாம், அனைவரின் வீட்டிலும் ஒரு சலவை இயந்திரம் இருக்கிறது. கையால் துணி துவைப்பவர்கள் மிகவும் அரிதாகிவிட்டார்கள் என்று சொல்லலாம். இவை நம் வாழ்வில் வந்த பிறகு, வேலை மிகவும் எளிதாகிவிட்டது. ஆனால் நீங்கள் இந்த இயந்திரத்தை சரியாகப் பராமரித்தால் மட்டுமே அது நீண்ட காலம் உழைக்கும்.
அதுமட்டுமின்றி நீங்கள் அறிந்தோ அறியாமலோ செய்யும் சில தவறுகள் உங்கள் இயந்திரத்தை சேதப்படுத்தக்கூடும் என்பது உங்களுக்குத் தெரியுமா? மிக முக்கியமாக, சில வகையான துணிகளை தவறுதலாகக் கூட சலவை இயந்திரத்தில் துவைக்கக் கூடாது. எவற்றைத் துவைக்கக் கூடாது? அவை என்னென்ன பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன என்பதை பார்ப்போம்.
கல் வேலைபாடு கொண்ட ஆடைகள்: பலர் தங்கள் ஆடைகளைத் தனித்துவமாக வடிவமைக்கிறார்கள். சில ஆடைகளில் கல் வேலைப்பாடுகள் இருக்கும். அத்தகைய ஆடைகளைச் சலவை இயந்திரத்தில் துவைக்கக் கூடாது. அவ்வாறு செய்தால், ஆடைகள் விரைவில் கிழிந்துவிடும். நூல்களும் பிரிந்துவிடும். அதுமட்டுமின்றி, இதன் காரணமாகச் சலவை இயந்திரமும் சேதமடையக்கூடும்.
கம்பளி ஆடைகள்: கம்பளி ஆடைகள் மிகவும் மென்மையானவை. எனவே, அவற்றை சலவை இயந்திரத்தில் துவைக்கக் கூடாது. இயந்திரத்தில் போட்டால், அவை விரைவில் சேதமடைய அதிக வாய்ப்புள்ளது. ஆகையால், சிறிதளவு சோப்பைப் பயன்படுத்தி அவற்றை மென்மையாகக் கையால் துவைக்க வேண்டும்.
ரெயின் கோட்: மழை அங்கி எனப்படும் ரெயின் கோட் நீர்ப்புகாதது என்பதால், அதை சலவை இயந்திரத்தில் துவைக்கக் கூடாது. அவ்வாறு செய்தால், மழை அங்கி பலூன் போல உப்பிக் கிழிந்துவிடும். மேலும், சலவை இயந்திரமும் சேதமடைய வாய்ப்புள்ளது.
எண்ணெய் மற்றும் கிரீஸ் கறை படிந்த ஆடைகள்: துணிகளில் கறை படிவது இயல்பானது. இருப்பினும், சமையல் எண்ணெய், பெட்ரோல், ஆல்கஹால், மோட்டார் கிரீஸ் போன்றவற்றால் கறை படிந்த துணிகளை ஒருபோதும் சலவை இயந்திரத்தில் போடாதீர்கள். இவை எளிதில் தீப்பற்றக்கூடியவை மற்றும் சலவை இயந்திரத்தில் தீ விபத்தை ஏற்படுத்தக்கூடும்.
லேஸ் துணிகள்: லேஸ் வேலைப்பாடு கொண்ட ஆடைகள் மிகவும் மென்மையானவை. அவற்றை சலவை இயந்திரத்தில் போட்டால், லேஸ் சேதமடைந்து ஆடையின் அழகு கெட்டுவிடும். எனவே, அவற்றை கையால் துவைப்பதே சிறந்தது.
விலையுயர்ந்த உள்ளாடைகள்: மிகவும் விலை உயர்ந்த, கவர்ச்சிகரமான, அல்லது பேடுகள் அல்லது அண்டர்வைர் கொண்ட உள்ளாடைகளை சலவை இயந்திரத்தில் துவைக்கக் கூடாது. குறிப்பாக அண்டர்வைர் கொண்ட உள்ளாடைகளை இயந்திரத்தில் போட்டால், அவை தங்கள் வடிவத்தை இழந்து கிழிந்துபோகும் அபாயம் உள்ளது.
