சென்னை: அக் ஷய திருதியைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்தாண்டு ஜனவரியுடன் ஒப்பிடும்போது, தற்போது தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. எனவே, அக் ஷய திருதியைக்கு தங்கம் வாங்க, பலரும் நகை கடைகளுக்கு சென்று, விரும்பிய நகைகளை தேர்வு செய்து, பணம் செலுத்தி முன்பதிவு செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் 35,000 நகை கடைகள் உள்ளன. இவற்றின் வாயிலாக தினமும் சராசரியாக, 15,000 கிலோ தங்க நகைகள் விற்பனையாகின்றன.
அக் ஷய திருதியை, தீபாவளிக்கு தங்கம் வாங்கினால், தங்களிடம் உள்ள செல்வம் மேலும் பெருகும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. இதனால், சுப தினங்களில் தங்கம் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.
பாதுகாப்பு அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்பு கொள்கையால், பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படும் சூழல் உருவானது. இதனால், முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி, தங்கத்தில் அதிக முதலீடு செய்ததால், சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்தது.
இதையடுத்து, நம் நாட்டில் கடந்த ஜன., இறுதியில், 22 காரட் ஆபரண தங்கம் சவரன் 1,34,400 ரூபாய் என்ற உச்சத்தை எட்டியது.
கடந்த மார்ச்சில் அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து, ஈரான் மீது தாக்குதல் நடத்தின.
இதனால், கச்சா எண்ணெய் ஏற்றி வரும் கப்பல் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டதால், பல நாடுகளில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.
முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை குறைத்து, கச்சா எண்ணெயில் அதிக முதலீடு செய்தனர். இதனால், தங்கம் விலை குறைந்தது. நேற்று சவரன் 1,12,800 ரூபாய்க்கு விற்பனையானது. இம் மாதம் 20ம் தேதி அக் ஷய திருதியை வருகிறது.
செய்கூலி எனவே, தற்போது பலரும் கடைகளுக்கு சென்று, விரும்பிய நகைகளை தேர்வு செய்து, பணம் செலுத்தி முன்பதிவு செய்து வருகின்றனர்.
இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:
தங்கம் விலை ஜனவரியில் மிகவும் அதிகரித்த நிலையில், தற்போது குறைந்துள்ளது. எனவே, அக் ஷய திருதியைக்கு நகை வாங்க, நகை கடைகளுக்கு தற்போதே சென்று பலரும் முன்பதிவு செய்கின்றனர்.
முன்பதிவு செய்த நாளில் இருந்து அக் ஷய திருதியை வரை, எந்த நாளில் விலை குறைவாக உள்ளதோ, அந்த விலைக்கு நகைகளை வாங்கலாம்.
குறைந்த செய்கூலி, சேதாரத்தில் 50 சதவீதம் தள்ளுபடி, வைர நகைகளுக்கு தள்ளுபடி என, ஒவ்வொரு நகை கடை நிறுவனமும் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன.
தங்கம் விலை குறைவால், பலரும் நகைகளை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் இந்தாண்டு அக் ஷய திருதியைக்கு தங்கம் விற்பனை அமோகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
