கோவை: சமையலுக்கு பயன்படுத்தப்படும் அலுமினிய பாத்திரங்களுக்கு, ஐ.எஸ்.ஐ., தரச்சான்று, அக்., 1 முதல் கட்டாயம் என, பி.ஐ.எஸ்., நிறுவனம் தெரிவித்து உள்ளது.
அனைத்து சமையலறை பாத்திரங்களுக்கும், இந்திய தர நிர்ணய அமைவனம் பி.ஐ.எஸ்., தர வரையறை செய்துள்ளது. இந்த தர நிலைகள், சிறந்த தயாரிப்பு செயல்திறனை ஊக்குவிப்பதுடன், நுகர்வோர் பாதுகாப்பை உறுதி செய்கின்றன.
வீடு, தொழில்முறை சமையலில் அலுமினிய பாத்திரங்களின் பங்கு முக்கியமானது. இந்நிலையில், அவற்றுக்கு ஐ.எஸ்.ஐ., தரச்சான்று பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பி.ஐ.எஸ்., கோவை கிளையின் முதுநிலை இயக்குநரும், தலைவருமான பவானி கூறியதாவது:
சமையலறையில் பயன்படுத்தப்படும் அலுமினிய பாத்திரங்களுக்கு தர நிலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஐ.எஸ்., 1660 : 2024 என்ற தர நிலைகளை பராமரிப்பது கட்டாயமாக்கப்படுகிறது.
அலுமினிய பாத்திரங்களின் தடிமன், அளவு, கைப்பிடிகளின் எடை தாங்கு திறன், தட்பவெப்ப தாங்குதிறன் என, பல்வேறு நிலைகளில் தர நிர்ணயம் செ ய்யப்பட்டு உள்ளது.
பாத்திரத்தில் 99.5 சதவீதம் அலுமினியம் இருப்பது கட்டாயம். வரும் அக்., 1ம் தேதி முதல், அலுமினிய பாத்திரங்கள் உற்பத்தி செய்யும் பெரிய நிறுவனங்கள், ஐ.எஸ்.ஐ., முத்திரையை பயன்படுத்த வேண்டும்.
ஐ.எஸ்.ஐ., முத்திரை இல்லாத அலுமினிய பாத்திரங்களை உற்பத்தி செய்யவோ, இறக்குமதி செய்யவோ, வினியோகிக்கவோ, சேமிக்கவோ, வாடகைக்கு எடுக்கவோ, குத்தகைக்கு விடவோ கூடாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அலுமினிய பாத்திரங்களுக்கு அக்., 1 முதல் தரச்சான்று கட்டாயம்
பி.ஐ.எஸ்., அமைப்பிடம் ஐ.எஸ்., 1660:2024 என்ற தரநிலையை பெறலாம்
