குவாஹாட்டி: அசாமில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும். இதன் மூலம் ஊடுருவல்காரர்கள் 4 முறை திருமணம் செய்து கொள்வது தடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா கூறினார்.
அசாம் சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக வரும் 9-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அசாமின் கோல்பாரா மாவட்டம் துத்னோயில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பேசியதாவது: அசாமில் பழங்குடியினர் மேம்பாட்டுக்காக பிரதமர் நரேந்திர மோடியும், முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவும் ஒரு விரிவான செயல்திட்டத்தை தயாரித்துள்ளனர். இங்கு பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால்தான் அதன் முழுமையான அமலாக்கம் சாத்தியமாகும். எனவே நீங்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும்.
