அசாம் முதல்வர் மனைவி மீது குற்றம் சுமத்திய வழக்கு.. ஐதராபாத்தில் முன்ஜாமீன் பெற்ற பவன் கேரா

அசாம் முதல்வரை விமர்சித்த வழக்கில் தெலங்கானா உயர் நீதிமன்றம் காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேராவுக்கு ஒரு வார கால முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

அசாமில் நேற்று தேர்தல் நடந்து முடிந்தது. பிரசாரத்தின்போது செய்தியர்களை சந்தித்த பவன் கேரா, பாஜகவை சேர்ந்த அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவின் மனைவி, இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து ஆகிய மூன்று நாட்டு பாஸ்போர்ட், துபாய் கோல்டன் விசா, துபாய், அமெரிக்காவில் சொத்துக்கள் வைத்துள்ளதாக குற்றம்சாட்டி சில ஆவணங்களை வெளியிட்டார்.

இவை போலியானவை என்று குற்றம்சாட்டிய ஹிமாந்தா பிஸ்வா, பவன் கேரா மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து வர அசாம் காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

உத்தரவை ஏற்று அசாம் காவல்துறையின் அடங்கிய குழு டெல்லி நிஜாமுதீன் பகுதியில் அமைந்துள்ள பவன் கேரா இல்லத்துக்கு அவரை கைது செய்ய புறப்பட்டது. ஆனால் பவன் கேரா அதற்கு முன் ஐதராபாத்திற்கு தனது மனைவி வீட்டுக்கு வந்துவிட்டார்.

இந்நிலையில் இது அரசியல் பழிவாங்கும் வழக்கு என கூறி இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வேண்டும் என பவன் கேரா தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இதில் பவன் கேரா தரப்பு வழக்கறிஞர், பொது வெளியில் நன்கு அறியப்பட்ட ஒரு மூத்த தலைவரை அரசியல் பழிவாங்கலுக்காக ஒரு மானநஷ்ட வழக்கில் அவரை கைது செய்துவர அசாமில் இருந்து டெல்லிக்கு 100 பேர் கொண்ட போலீஸ் குழுவை ஏவிவிடுவது காட்டுராஜ்யம் அன்றி வேறொன்றுமில்லை. தனது கட்சிக்காரர் எங்கும் ஓடிவிட மாட்டார் என்று வாதிட்டார்.

அப்படியென்றால் அவர் அசாம் வந்து முன்ஜாமீன் கோரட்டுமே என்று அசாம் அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

வாதங்களை கேட்ட நீதிபதி கே. சுஜானா தலைமையிலான அமர்வு, பவன் அசாம் அல்லது சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றத்தை அணுக ஏதுவாக ஒரு வார கால அவகாசம் கொடுத்து முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Source link