அச்சம் விதைத்த வைபவ் * பும்ரா பந்துகளில் சிக்சர் எப்படி

கவுகாத்தி: ”உங்கள் பந்துகளை பவுண்டரி, சிக்சர்களாக விளாசப் போகிறேன், என்ற அச்சத்தை உருவாக்கி, அதை பவுலர்கள் மனதில் ஆழமாக பதியச் செய்து விட்டார் வைபவ்,” என, ஸ்டைன் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 15. சமீபத்தில் நடந்த யூத் ஒருநாள் உலக கோப்பை தொடர் பைனலில், 80 பந்தில் 175 ரன் விளாசி, இந்தியா கோப்பை வெல்ல கைகொடுத்தார். கிரிக்கெட் லீக் தொடரின் நடப்பு சீசனில், முதல் இரு போட்டியில் 17 பந்தில் 52, 18 பந்தில் 31 என ரன் எடுத்தார்.

இதனால் உலகின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இடம் பெற்ற மும்பை அணிக்கு எதிராக இவரது பேட்டிங் குறித்து அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. கவுகாத்தியில் நடந்த போட்டியில் பும்ரா வீசிய முதல் பந்தை எதிர்கொண்ட வைபவ், சிக்சர் விளாசி மிரட்டினார். தொடர்ந்து 4வது பந்திலும் சிக்சர் அடித்த வைபவ், 14 பந்தில் 39 ரன் விளாசினார்.

இதுகுறித்து தென் ஆப்ரிக்க அணி முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டைன் கூறியது: வைபவ் தனது வேலையை சரியாகச் செய்கிறார். கொஞ்சம் கூட பயம் இல்லை. இதனால் தான், எதிர் முனையில் பந்துவீசுவது பும்ரா அல்லது யாராக இருந்தாலும் சரி, சிறப்பாக செயல்பட முடிகிறது.

உண்மையில்,’ உங்கள் பந்துகளை பவுண்டரி, சிக்சர்களாக விளாசப் போகிறேன்,’ என்ற அச்சத்தை உருவாக்கி, அதை பவுலர்கள் மனதில் ஆழமாக பதியச் செய்து விட்டார் வைபவ். மும்பைக்கு எதிரான போட்டியில் பும்ரா வீசிய பந்து, வைபவ் அடிப்பதற்கு சாதகமாகத் தான் வந்தது.

பும்ரா போன்ற பவுலர்களிடம் இருந்து இதுபோன்ற பவுலிங்கை பார்ப்பது அரிது. ஆனால், மிகச்சிறந்த பந்துவீச்சாளரான பும்ரா மனதில்,’ நாம் தவறு செய்துவிடக் கூடாது என்ற எண்ணம் ஆழ் மனதில் இருந்தது.

இப்படிப்பட்ட பயத்துடன் ஒரு பவுலர் பந்துவீசினால், பெரும்பாலான நேரங்களில் தவறு செய்யவே வாய்ப்பு அதிகம். இதனால், வைபவ் சிக்சர் அடித்ததை பார்த்து, பும்ரா சிரித்து விட்டார் போல. ஏனெனில் நாம் தவறு செய்தால் இப்படித் தான் நடக்கும் என்பதை முன்னதாகவே பும்ரா உணர்ந்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

ஆஸ்திரேலிய அணி முன்னாள் கேப்டன் ஆரோன் பின்ச் கூறுகையில்,” பும்ராவை பொறுத்தவரையில் முதல் பந்தை, வேகமாக, துல்லியமாக, ஒரு ‘இன் சுவிங்’ யார்க்கராகத் தான் வீச முயற்சித்து இருப்பார். இதனால் வைபவை போல்டாக்க திட்டமிட்டு இருக்கலாம். ஆனால் அவரது திட்டத்தை செயல்படுத்துவதில் தவறு நடக்க, வைபவ் சிக்சர் அடித்து விட்டார்,” என்றார்.

Source link