அச்சம் வேண்டாம்; 21 நாள் கையிருப்பு இருக்கிறது; சொல்கிறது பெட்ரோல் பங்க் உரிமையாளர் சங்கம்

சென்னை: பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏதும் இல்லை. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 21 நாட்களுக்கு தேவையான கையிருப்பு இருக்கிறது, என்று சொல்கிறது பெட்ரோல் பங்க் உரிமையாளர் சங்கத்தின் மாநில தலைவர் முரளி தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது; ஜெனரேட்டர்கள், அவசர தேவைகளுக்கு மட்டும் டீசலை கேன்களில் வாங்கினால் போதும். தட்டுப்பாடு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில், கேன்களில் வாங்கி இருப்பு வைத்தால், செயற்கையான தட்டுப்பாடு ஏற்படும். சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை நீங்கள் எந்த பெட்ரோல் பங்க்குகளுக்கு சென்றாலும், பெட்ரோல் போட்டுக் கொள்ளலாம். 2013,14ம் ஆண்டுகளில் 4,000 பெட்ரோல் பங்க்குகள் தான் இருந்தன. தற்போது, 7,000 பங்க்குகள் உள்ளன. எனவே, தட்டுப்பாடு இல்லை.

வணிக பயன்பாட்டு சிலிண்டர்களின் விநியோகத்தை நிறுத்துமாறு ஆயில் நிறுவனங்கள் விநியோகஸ்தர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர். இது மீடியாக்களில் செய்தியாக வெளி வந்ததால், அடுத்து பெட்ரோல், டீசலுக்கு தான் தட்டுப்பாடு ஏற்படும் என்று நினைத்து மக்கள் பெட்ரோல் பங்க்குகளை தேடிச் செல்கின்றனர். இதனால், வழக்கத்தை விட கூடுதலாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இது தேவையே இல்லை.

நெருக்கடியான சூழலில் பிற நாடுகளில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி இருக்கிறார்கள். நம் நாட்டில் எந்த விலையும் உயர்த்தப்படாது என்று மத்திய அரசு அறிவித்து விட்டது. இந்த சூழலில் மக்களின் ஒத்துழைப்பு அவசியம். பெட்ரோல், டீசல் தட்டுப்பாடின்றி கிடைக்கும் சூழலில், தேவையில்லாமல் செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மத்திய அரசிடம் 90 நாளைக்கான கையிருப்பு இருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் 14 எரிபொருள் நிலையங்கள் உள்ளன. அதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் உள்ள சுமார் 7,000 பெட்ரோல் பங்க்குகளில் 21 நாளுக்கான இருப்பு இருக்கிறது. சென்னையில் இருக்கும் எண்ணெய் நிறுவனங்களின் முக்கிய நிர்வாகிகளிடம் நீங்கள் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

மீடியாக்களில் தட்டுப்பாடு என்று அதிகமான செய்திகள் வெளி வந்ததால், அவர்களிடம் தொலைபேசியில் நான் தொடர்பு கொண்டு கேட்டேன். எந்த தட்டுப்பாடும் இல்லை, முன்கூட்டியே டேங்கர்கள் அனுப்புவதாக சொன்னார்கள். எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்று சொன்னார்கள். யாரும் அச்சப்பட வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

Source link