அஜித் பவார் மரணத்தில் மர்மம்? சந்தேகம் கிளப்பும் ரோஹித் பவார்

மும்பை: ”அஜித் பவார் மரணம் தொடர்பாக, அனைவரது மனதில் கேள்விகளும், சந்தேகங்களும் உள்ளன. இது குறித்து மும்பையில், 10ம் தேதி விரிவாக விளக்கம் அளிக்கிறேன்,” என, அவரது உறவினரும், சரத் பவார் தரப்பு எம்.எல்.ஏ.,வுமான ரோஹித் பவார் தெரிவித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மஹாராஷ்டிரா துணை முதல்வராக இருந்த தேசியவாத காங்., தலைவர் அஜித் பவார், 66, புனே மாவட்டத்தின் பாராமதியில் நடக்கவிருந்த தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்க, கடந்த 28ல், தனியாருக்கு சொந்தமான சிறிய விமானத்தில் சென்றார்.

கேள்வி

பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, கட்டுப்பாட்டை இழந்து விமானம் கீழே விழுந்து வெடித்து சிதறியதில், அஜித் பவார் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர்.

தன் குருவான சரத் பவாருடன் இணையவிருந்த நிலையில், அஜித் பவாரின் மறைவு தேசியவாத காங்., தொண்டர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது.

இதையடுத்து, அஜித் பவாரின் மனைவியும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சுநேத்ரா, துணை முதல்வர் ஆனார். தற்போது, பிளவுபட்ட தேசியவாத காங்., இணைவதில் முட்டுக்கட்டை நிலவுகிறது.

புனே , ராய்கட், ரத்னகிரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில், நேற்று மாவட்ட பஞ்சாயத்து தேர்தல் நடந்தது. மேலும், 125 பஞ்சாயத்து குழுக்களுக்கும் தேர்தல் நடந்தது.

இதில், சரத் பவாரின் தேசியவாத காங்கிரசுடன், மறைந்த அஜித் பவாரின் தேசியவாத காங்., கூட்டணி வைத்துள்ளது.

பாராமதியில் ஓட்டளித்த பின், சரத் பவார் தரப்பைச் சேர்ந்த கர்ஜத் -ஜாம்கேட் தொகுதி எம்.எல்.ஏ.,வும், அஜித் பவாரின் உறவினருமான ரோஹித் பவார் கூறியதாவது:

அஜித் பவார் மரணத்தில் அனைவரது மனதில் கேள்விகளும், சந்தேகங்களும் உள்ளன. இந்த விபத்து ஏன் நடந்தது, எப்படி நடந்தது என்பது குறித்து, மும்பையில், 10ம் தேதி விரிவாக விளக்கம் அளிக்கிறேன்.

பிளவுபட்ட தேசிய வாத காங்., மீண்டும் இணைய வேண்டும் என்பதே அஜித் பவாரின் விருப்பமாக இருந்தது.

விவாதம்

அந்த இணைப்பு முயற்சிகள் தொடர்ந்து நடக்கும். எங்களின் குடும்பம் இப்போதும் ஒற்றுமையாகவே இருக்கிறது. கட்சிகள் இணைப்பின் பின்னணியில் இருந்த அரசியல் மற்றும் உணர்வுப்பூர்வமான உண்மை காரணங்களையும், 12ம் தேதி தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

அஜித் பவார் மரணத்தில், அவரது உறவினர் ரோஹித் பவார் சந்தேகம் கிளப்பும் வகையில் பேசியுள்ளது, மஹாராஷ்டிர அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

Source link