“அடிமை எடப்பாடி பழனிசாமியை விரட்டி அடிக்க வேண்டும்”

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை முடிந்து அடுத்தக்கட்ட தேர்தல் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில், துணை முதல்வரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று (30-03-26) காஞ்சிபுரத்தில் தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார்.

காஞ்சிபுரத்தில் உள்ள அறிஞர் அண்ணா வீட்டுக்குச் சென்ற உதயநிதி ஸ்டாலின் அங்கு மரியாதை செலுத்திவிட்டு தேரடி பகுதியில் காஞ்சிபுரம் திமுக வேட்பாளர் நித்யா சுகுமார், உத்தரமேரூர் வேட்பாளர் சுந்தர் ஆகியோரை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், “உங்களுடைய எழுச்சியும் மகிழ்ச்சியான முகத்தையும் பார்க்கும்போது ஏற்கெனவே சட்டமன்றத் தேர்தல் வெற்றியை நீங்கள் முடிவு செய்துவிட்டீர்கள். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இதே காஞ்சிபுரத்தில் அண்ணாவின் வீட்டுக்கு போய் அவருக்கு மரியாதை செய்துவிட்டு என்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை நான் துவங்கினேன். இன்றைக்கு அதே மாதிரி சட்டமன்றத் தேர்தலுக்கும் காஞ்சிபுரத்துக்கு வந்து என்னுடைய முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறேன்.

இரண்டு நாளைக்கு முன்னாடி எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தை சென்னையில் பாஜக போட்டியிடும் மயிலாப்பூர் தொகுதியில் தொடங்கினார். நம்முடைய கொள்கைத் தலைவர்கள் பேரறிஞர் அண்ணாவும் கலைஞரும். ஆனால் எடப்பாடி பழனிசாமியின் கொள்கைத் தலைவர்கள் அமித்ஷாவும், மோடியும் தான். மீண்டும் மோடியையும், அமித்ஷாவையும் தமிழ்நாட்டுக்குள் நுழைய விடலாமா? தமிழ்நாட்டு மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். அதனால் நம்முடைய தலைவர், வரவிருக்கும் தேர்தல் தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்குமான தேர்தல் என்று சொல்கிறார். மீண்டும் தமிழ்நாட்டுக்குள் பாசிச சக்தியை, பா.ஜ.க சக்தியை நுழைய விடக்கூடாது. இன்றைக்கு மக்களை சந்திக்க ஆரம்பித்திருக்கிறோம். ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு எந்த திட்டமும் கிடையாது. அந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயர் கூட கிடையாது.

அப்படிப்பட்ட ஒன்றிய அரசை அதிமுக என்ற அடிமை கூட்டம் தமிழ்நாட்டுக்குள் கொண்டு வருகிறது. ஜாடிக்கு ஏத்து மூடி என்பது மாதிரி மோடிக்கு ஒரு அடிமையாக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். முரட்டு பக்தர்களை பார்த்திருக்கிறோம். முரட்டு தொண்டர்களை கேள்விப்பட்டிருக்கிறோம். இந்தியாவிலேயே ஒரு முரட்டு அடிமையை எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். அப்படிப்பட்ட முரட்டு அடிமையை விரட்டி அடிக்க வேண்டிய தேர்தல் வருகின்ற சட்டமன்றத் தேர்தல். தமிழ்நாட்டை தொடர்ந்து ஒதுக்கி வைக்கிற பா.ஜ.க நாம் ஒதுக்கி வைக்க வேண்டும்” என்று பேசினார். 

Source link