அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்ற முதலீட்டு உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அதிபர் ட்ரம்ப், நீண்ட நேரம் உரையாற்றினார். இதில், “வெனிசுலா மற்றும் ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளில் அமெரிக்க ராணுவம் மகத்தான வெற்றியைப் பதிவு செய்துள்ளது. நான் இந்த மகத்தான அமெரிக்க ராணுவத்தை உருவாக்கினேன். அவர்களிடம், நீங்கள் ஒரு போதும் போரில் ஈடுபட வேண்டிய தேவை இருக்காது என்று கூறியிருந்தேன். ஆனால், சில நேரங்களில் ராணுவத்தைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. சொல்லப்போனால், அடுத்த இலக்கு கியூபா தான்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ட்ரம்ப், “கியூபா தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. அந்நாட்டு அரசாங்கம் வீழ்ச்சியின் விளிம்பில் உள்ளது என்று நம்புகிறேன். அந்த நாட்டுக்கு எதிராக அமெரிக்கா, ராணுவ ரீதியிலான நேரடி நடவடிக்கையை எடுக்கலாம். எனினும், ராணுவ மோதலை தவிர்க்கும் பொருட்டு, அமெரிக்காவுடன் தங்கள் நாடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் மிகுவல் டியாஸ்-கேனல் ஒப்புக்கொண்டுள்ளார். பேச்சுவார்த்தையின் இறுதியில் கியூபா நட்பான முறையில் கையகப்படுத்தலுக்கு உள்ளாகலாம்; உள்ளாகாமலும் போகலாம்’’ என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, ராணுவப் படைகளைக் கொண்டு வெனிசுலாவில் தாக்குதல் நடத்தி, அந்நாட்டு அதிபரைக் கைது செய்து சிறையில் அடைத்தது அமெரிக்கா. இதையடுத்து துணை அதிபர், அந்நாட்டின் அதிபராகப் பதவி ஏற்றுக்கொண்டார். இருப்பினும், நாட்டின் அனைத்து கட்டுப்பாடுகளும் அமெரிக்காவின் பிடியில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன. அதே போல, ஈரான் மீதும் அமெரிக்க ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே, அடுத்ததாகக் கியூபாவை இலக்கு வைப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருப்பது உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
