திருப்பூர்: தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய, மத்திய – மாநில அரசு திட்டங்களால், அடுத்து வரும் ஐந்து ஆண்டுகள், திருப்பூருக்கு பொற்காலமாக அமையும் என, இந்திய தொழில் கூட்டமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, இந்திய தொழில் கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ.,) திருப்பூர் மாவட்ட துணை தலைவர் சுனில் ஜுன்ஜுன்வாலா கூறியதாவது:
செயற்கை நுாலிழை உள்ளிட்ட மூலப்பொருட்கள் இறக்குமதியில் நிலவிய, இந்திய தரக்கவுன்சில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் உள்ள 90 சதவீத துணி மற்றும் ஆடைகள் தயாரிக்க, குறைந்த நீளமுள்ள இழைகள் கொண்ட பருத்தியே போதும். அது, குஜராத்தில் இருந்து கிடைக்கிறது.
உயர்தர பின்னலாடை தயாரிப்புக்கு மட்டும், மிக நீண்ட இழை பருத்தி பயன்படுகிறது.
இவ்வகை பருத்தி, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து மட்டுமே இறக்குமதியாகிறது. இவ்வகை பருத்தி, அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இனிமேல், முழுமையான வரி விலக்கில் இறக்குமதி செய்து பயன்படுத்தலாம்.
‘வுட்பல்ப்’ எனப்படும் மரக்கூழில், ‘விஸ்கோஸ்’ போன்ற செயற்கை நுாலிழை தயாரிக்கும் பஞ்சு உருவாக்கப்படுகிறது; அதிலிருந்து நுாலிழை தயாராகிறது. இனிமேல், வரிச்சுமை இல்லாமல், தடையில்லா இறக்குமதி செய்யலாம். இந்தோனேசியாவில் இருந்துதான் அனைத்து நாடுகளுக்கும் ‘வுட் பல்ப்’ ஏற்றுமதியாகிறது.
விரைவில், துாத்துக்குடியில், செயற்கை பஞ்சு மற்றும் நுாலிழை தயாரிக்கும் பெரிய நிறுவனம் அமையப்போகிறது.
இதன் வாயிலாக, தமிழகத்திலேயே, செயற்கை நுாலிழை, துணி தடையின்றி கிடைக்கும்.
தமிழக அரசும், ‘நிட்டிங்’ மெஷின்கள் வாங்க, 20 சதவீதம் மூலதன மானியம் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. சாய ஆலைகளில் புதிய தொழில்நுட்ப இயந்திரங்கள் வாங்கும், மூலதன மானியம், 25 சதவீதம் வழங்கும் திட்டம் உள்ளது. மத்திய பட்ஜெட்டிலும், புதிய தொழில்நுட்ப மேம்பாட்டு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் வளரும் போது, திறமையான தொழிலாளர் தேவை. அதற்காகவே, ‘சமர்த் – 2.0’ என்ற திட்டம் புதிய வடிவில் அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் பல நாடுகளுடனான வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வர இருக்கிறது.
அனைத்து திட்டங்களையும் சரிவர பயன்படுத்தினால், தொழில் வளர்ச்சி என்பது, இரண்டு அல்ல மூன்று மடங்கிற்கும் அதிகமாக இருக்கும். திருப்பூர் ‘கிளஸ்டருக்கு’ அடுத்து வரும் ஐந்து ஆண்டுகள் பொற்காலமாக அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
