அடுத்த மூன்று மாதங்களுக்கு தவெக அரசுக்கு இருக்கும் சவால்கள் – என்ன செய்யப் போகிறார் முதல்வர் விஜய் – tvk govt faces three major challenges next three months for northeast monsoon rice price hike and super el niño

தமிழகத்தில் வடகிழக்கு பருவழை தொடங்கி பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று பெய்த மழையால் சென்னையில் மழைநீர் தேங்கியது. இந்த சூழலில் அடுத்து மூன்று மாதங்கள் தவெக அரசுக்கும் முதல்வர் விஜய்க்கும் மூன்று முக்கிய சவால்கள் உள்ளன. அதுகுறித்து காணலாம்.

சென்னையில் நேற்று பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் மழைநீர் தேங்கி, மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். சாலைகளில் மழைநீர் வெள்ளம் போலப் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் வேளச்சேரி போன்ற தாழ்வான பகுதிகளில் மழை வீடுகளில் புகுந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வடகிழக்குப் பருவமழை, தமிழகத்தின் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு, சூப்பர் எல் நினோவின் மூன்றாம் கட்டத் தாக்கம் என அடுத்த மூன்று மாதங்களுக்கு தமிழ்நாடு முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்குப் பெரும் சவால்கள் வரிசைகட்டி காத்திருக்கின்றன.

முதல்வர் முன்னிருக்கும் 3 சவால்கள்

வடகிழக்குப் பருவமழை பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு சூப்பர் எல் நினோ மூன்றாம் கட்டத் தாக்கம்

வடகிழக்குப் பருவமழை

சூப்பர் எல் நினோ தாக்கத்தால் தமிழகத்தில் மழைக்கு முன்பு வரை மின் தட்டுப்பாடு நிலவி வந்தது. கோடை முடிந்த பின்னரும் மக்கள் சுட்டெரித்த வெயிலால் கடும் அவதிக்கு ஆளாகினர். முன்கூட்டியே தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 15 ஆம் தேதி தொடங்கும் என வானிலை ஆய்வாளர்கள் கூறி வந்தனர். இந்தச் சூழலில் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 14 ஆம் தேதி முதலே தொடங்கி, தமிழகத்தில் சென்னை, நாகை, திருவாரூர், நீலகிரி, தேனி, கோவை, திருநெல்வேலி, கடலூர் எனப் பல்வேறு மாவட்டங்களில் தினந்தோறும் பெய்து வருகிறது.

ஒரே இரவில் மூழ்கிய சென்னை

இந்தச் சூழலில் சென்னையில் நேற்று அக்டோபர் 17ஆம் தேதி பெய்த மழையால் சென்னை ஒரே இரவில் வெள்ளம் போல மழைநீர் தேங்கி, பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. இருந்தபோதிலும் மாநகராட்சிப் பணியாளர்கள் துரிதமாகச் செயல்பட்டு, பல இடங்களில் தேங்கிய மழைநீரை அகற்றினர். மேலும் சென்னையில் மழைநீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

டிசம்பர் வரை தொடரும் மழை

வடகிழக்குப் பருவமழை டிசம்பர் வரை தொடர உள்ளது. மேலும் சென்னை போன்று தமிழகத்தில் பல மாவட்டங்களில் எதிர்பார்த்ததைவிட அதிக மழைக்கு வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

விலைவாசி உயர்வு

தமிழ்நாட்டில் அத்தியாவசியத்திற்குத் தேவையான பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் தங்களது அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.தற்போது, அரிசி, பருப்பு மற்றும் சமையலுக்குத் தேவையான எண்ணெய் உட்பட அனைத்துப் பொருட்களின் விலைவாசி உயர்வால் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

தினந்தோறும் ஏதாவது ஒரு பொருளின் விலை உயர்ந்து வருவதாகவும், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்த பிறகே இப்படி கடும் விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

உச்சத்தில் சூப்பர் எல் நினோ

வடகிழக்குப் பருவமழைக்குப் பிறகு தமிழகத்தில் மட்டுமின்றி உலகம் முழுவதும் சூப்பர் எல் நினோவின் 3 ஆம் கட்டத் தாக்கம் ஏற்படும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதனால் 2027 ஆம் ஆண்டு இறப்பு சதவீதமும் அதிகரிக்குமாம். இந்நிலையில் இந்தத் தாக்கம் தமிழகத்தில் இருக்கும் எனவும், விவசாயம் மற்றும் நீர்ப் பற்றாக்குறை ஆகிய பாதிப்புகள் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன செய்யப் போகிறார் முதல்வர் விஜய்

இனி வரும் நாட்களில் இந்த மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. மழையால் மக்களின் வீடுகள் மற்றும் பணிகள் பாதிக்கப்படும், அதே சமயம், வெள்ளம் ஏற்பட்டால் தற்போது இருக்கும் விலைவாசி உயர்வு மற்றும் அரிசி, பருப்பு உள்ளிட்ட அடிப்படையான பொருட்களின் தட்டுப்பாடு மக்களின் இயல்பு வாழ்க்கையை மேலும் பாதிக்கும். அதே சமயம் ஜனவரியில் அடுத்த கட்டத்திற்கு நகரும் சூப்பர் எல் நினோவால் தமிழகத்தில் பல இடங்களில் குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்படும். மேலும் விவசாயிகளுக்குத் தேவையான நீர் கிடைப்பதில் மீண்டும் சிக்கல் உருவாகும்.

பணிகளை வேகப்படுத்துதல்

சாலைகளில் மழைநீர் தேங்காத அளவுக்கு, மழைநீர் வடிகால்களை வேகமாகச் சீரமைக்க வேண்டும். மேலும் வடிகால் அமைக்கப்பட்ட இடங்களில் அதனை முறையாகப் பராமரித்து, இயக்க நிலையில் வைத்திருக்க வேண்டும்.

நியாயவிலைக் கடைகளில் இருப்பை உறுதி செய்தல்

தமிழ்நாடு நியாயவிலைக் கடைகளில் கிடைக்கும் அரிசி, பருப்பு மற்றும் எண்ணெய் போன்ற அடிப்படைப் பொருட்களின் இருப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு கடையிலும் இருக்கும் பொருட்களின் தரத்தை ஆராய்ந்து முறையாக மக்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

ஏரிகள், ஆறுகளைப் பராமரித்தல்

தமிழகத்தில் உள்ள ஏரிகள் மற்றும் ஆறுகளைத் தூர்வாரிப் பராமரிக்க வேண்டும். குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் இருக்கும் பாசனக் கால்வாய்களைத் தூர்வாரி, நீரைச் சேமித்து, சூப்பர் எல் நினோவின் மூன்றாம் கட்டக் காலத்தில் அதனை விவசாயிகள் பயன்படுத்த உதவி செய்ய வேண்டும்.

Source link