மஸ்கட்: அமெரிக்கா – ஈரான் இடையே அணுசக்தி திட்ட ஒப்பந்தம் தொடர்பான அடுத்தகட்ட பேச்சு, ஜெனீவாவில் நடைபெற உள்ளதாக ஓமன் வெளியுறவுத்துறை அமைச்சர் பத்ர் அல்புசைதி தெரிவித்துள்ளார்.
மேற்காசிய நாடான ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே, அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பிரச்னை நீண்ட காலமாக இருந்து வருகிறது. அணுசக்தி ஒப்பந்தம் செய்ய, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈரானுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார்.
இது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே பேச்சு நடத்த, மேற்காசிய நாடான ஓமன் மத்தியஸ்தம் செய்கிறது. ஏற்கனவே, ஓமனில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சரை, இரு தரப்பினரும் தனித்தனியாக சந்தித்து பேசினர். ஆனால், முடிவு எட்டப்படவில்லை.
இதையடுத்து, நாளை மறுநாள் இரு தரப்பு பிரதிநிதிகளும் ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நேருக்கு நேர் சந்தித்து பேச உள்ளதாக ஓமன் வெளியுறவுத்துறை அமைச்சர் பத்ர் அல்புசைதி தெரிவித்து உள்ளார்.
பேச்சு தோல்வியில் முடிந்தால், அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்!
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானில் தங்கியுள்ள இந்தியர்களுக்கு மத்திய அரசு நேற்று மிக முக்கியமான மற்றும் அவசர பாதுகாப்பு ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
இது தொடர்பாக நம் வெளியுறவுத் துறை நேற்று வெளியிட்டுள்ள செய்தி:
ஈரானில் உள்ள இந்தியர்கள், கிடைக்கக்கூடிய போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தி உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும். தவிர்க்க முடியாத காரணத்தைத் தவிர, ஈரானுக்கு பயணம் செய்ய வேண்டாம். ஈரானில் இருக்கும் இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
அங்குள்ள இந்தியத் துாதரகம் அல்லது துணைத் துாதரகங்களில் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். நம் துாதரகம் வழங்கும் பாதுகாப்பு வழிகளை பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
