சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவி ஒருவர் நேற்று (26-03-26) காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த புகாரில், “பேராசிரியர் ஒருவர் தனக்கு நேரடியாகவும், செல்போனில் குறுஞ்செய்திகள் மூலமாகவும் பாலியல் தொல்லை தருவதாகவும், தனக்கு மட்டுமல்லாமல் இன்னும் சில மாணவிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகவும், இதை வெளியில் சொன்னால் உங்களைத் தொலைத்து விடுவேன்” என்று மிரட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பாக ஏற்கனவே பல்கலைக்கழக நிர்வாகத்திடமும் தான் முறையிட்டிருப்பதாகவும், இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்கும் படியும் மாணவி கோரிக்கை வைத்துள்ளார். இதையடுத்து, மாணவி அளித்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி காவல் ஆணையர் அருண், அபிராமபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, காவல் உயரதிகாரிகளின் நேரடி கட்டுப்பாட்டில், இந்த புகார் மீதான விசாரணையை அபிராமபுரம் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மாணவியிடம் மயிலாப்பூர் காவல் ஆணையர் தலைமையில் பெண் காவல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே, கடந்த 2024 ஆம் ஆண்டு ஞானசேகரன் என்பவர் அண்ணா பலகலைக் கழக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்தில் சிறையில் இருந்து வருகிறார். இந்நிலையில், பேராசிரியர் ஒருவரே இவ்வாறான செயலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
