கோடைகாலம் தொடங்கி இருக்கும் சூழலில் வனப்பகுதியை விட்டு உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக காட்டு விலங்குகள் வெளியேறி வருவது அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், கடம்பூர், குண்டேரிப்பள்ளம் உள்ளிட்ட இடங்களில் வனவிலங்குகளால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்துள்ளது.
சத்தியமங்கலம் மற்றும் கடம்பூர் மலைப் பாதைகளில் அவ்வப்போது சிறுத்தைகள் சாலையைக் கடப்பதால், வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தாமலும், அதிக ஒலி எழுப்பாமலும் செல்லுமாறு வனத்துறையினர் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
மிகவும் குறிப்பாக கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் குண்டேரிப்பள்ளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 10-க்கும் மேற்பட்ட ஆடுகளைச் சிறுத்தை ஒன்று கடித்துக் கொன்றுள்ளது. மலையடிவாரத்தில் உள்ள தோட்டங்களுக்குள் சிறுத்தை புகுந்ததால் அந்தப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த அச்சத்தில் இருந்து வந்தனர். பொதுமக்களின் கோரிக்கையைத் தொடர்ந்து வனத்துறையினர் சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமராக்களைப் பொருத்தியும், கூண்டுகளை வைத்தும் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களாக வினோபா நகர் மற்றும் குண்டேரிப்பள்ளம் பகுதிகளில் கால்நடைகளை வேட்டையாடி வந்த சுமார் 6 வயது மதிக்கத்தக்க அந்த ஆண் சிறுத்தை இன்று அதிகாலை 3 மணி அளவில் வனத்துறையினர் வைத்தக் கூண்டில் சிக்கியுள்ளது. பிடிபட்ட சிறுத்தை அடர்ந்த வனப்பகுதிக்குள் விடப்பட உள்ளது. கடந்த ஆறு மாதமாக பீதியில் உறைந்திருந்த குண்டேரிப்பள்ளம் பகுதியை சேர்ந்த மக்கள் சிறுத்தை பிடிபட்டதால் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தின் பிற பகுதிகளான சென்னிமலை மற்றும் மராயீபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், அங்கும் வனத்துறையால் கூண்டுகள் வைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
