அதிக லாபம் ஈட்டும் தொழிலாக அரசியல் மாறி விட்டது: சீமான் குற்றச்சாட்டு

திட்டக்குடி: ”தி.மு.க., வந்தாலும், அ.தி.மு.க., வந்தாலும் டாஸ்மாக் இருக்கும்; சாராயம் விற்பார்கள்,” என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்தார்.

கடலுார் மாவட்டம், திட்டக்குடியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், திட்டக்குடி, விருத்தாசலம் தொகுதிகளின் நா.த.க., வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார்.கூட்டத்தில் சீமான் பேசியதாவது: தமிழகத்தில் அதிகரித்துள்ள ஊழல், லஞ்சத்தை துடைத்தெறிய எனக்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது.

அதிகாரம் என்பது மிக வலிமையானது. என் மக்களுக்காக, இந்த நிலைப்பாட்டை எடுத்து கொண்டு போட்டியிடுகிறோம். இழந்த உரிமைகளை மீட்கவும், காக்கவும் நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம். அரசியல் என்பது மக்களுக்கு சேவை செய்யும் ஒரு புனிதமான பணி. ஆனால், தமிழகத்தில் அரசியல் என்பது அதிக லாபம் ஈட்டும் தொழிலாக மாறி விட்டது. நமக்கு கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவ வசதிகள் கிடைக்கவில்லை.

உலகின் சிறந்த நாடுகளின் பட்டியலில், 3வது இடத்தில் சிங்கப்பூர் உள்ளது. பரப்பளவில் சிறிய நாடான அங்கு, ஊழல், லஞ்சமற்ற நிர்வாகம் நடக்கிறது. அதற்கான தலைசிறந்த தலைவன் இருக்கிறார்; ஆனால் இங்கு அப்படி ஒரு தலைவன் இல்லை. நம் நாட்டில் எல்லா வளங்களும் இருந்தும், 30 சதவீதம் பேர் இரவு உணவில்லாமல் துாங்க செல்கின்றனர்.நா.த.க., ஆட்சிக்கு வந்தால் இந்த நிலையை மாற்றுவோம்; ஊழல், லஞ்சமற்ற நாடாக உருவாக்குவோம். இவ்வாறு அவர் பேசினார்.

இதேபோல, கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி, புவனகிரி, காட்டுமன்னார்கோவில் தொகுதிகளின் நா.த.க., வேட்பாளர்களை ஆதரித்து, வடலுாரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்திலும் சீமான் பங்கேற்று பேசினார். அப்போது, ‘இலவசங்களை அறிவிப்பவர்கள் மக்களை ஏமாளியாகவே பார்க்கிறார்கள். உதயசூரியன், இரட்டை இலை, கை, தாமரை ஆகிய சின்னங்களுக்கு ஓட்டு போட்டதில், மக்கள் தோற்றார்கள். ‘கருணையற்ற ஆட்சி கடுகி ஒழிக’ என வள்ளலார் கூறினார். திராவிட திருடர்களின் ஆட்சிதான் கருணையற்ற ஆட்சி. தி.மு.க., வந்தாலும், அ.தி.மு.க., வந்தாலும் டாஸ்மாக் இருக்கும்; சாராயம் விற்பார்கள்’ என்று ஆவேசமாக கூறினார்.

Source link