மதுரை: ‘‘தேர்தல் வரை தான் அதிமுகவுக்கு இபிஎஸ் பொதுச்செயலாளர். தேர்தல் முடிந்ததும், வேறு பொதுச்செயலாளரை பாஜ நியமித்து விடும்,” என்று மதுரையில் நடந்த ஓபிஎஸ் இணைப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
அவர் பேசியதாவது:அதிமுகவுக்கு வேறு பொதுச்செயலாளரை பாஜ தேர்வு செய்து வைத்துள்ளது. தேர்தல் வரை தான் இபிஎஸ் பொதுச்செயலாளர். தேர்தல் முடிந்ததும் தான் தேர்வு செய்துள்ளவரை பாஜ நியமித்து விடும். அந்தளவுக்கு பாஜவிடம் அதிமுக சென்று சிக்கியுள்ளது.இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.முன்னதாக விழாவில் ஓபிஎஸ் பேசியதாவது;
50 ஆண்டுகால அரசியல் வாழ்வில் நான் ஏற்றுக்கொண்ட தலைமைக்கு விசுவாசமாகவும் கொண்ட கொள்கைக்கு நேர்மையாகவும், கொடுத்த பணிக்கு மனிசாட்சியுடனும், நன்றியுடனும் நான் பணியாற்றி இருக்கிறேன்.
நான் இருந்த இயக்கத்தில் எனக்கென்று ஒரு தனி அணியையோ என்றுமே நான் என்றுமே உருவாக்கியது இல்லை. உருவாக்க வேண்டும் என்று நான் என்றுமே எண்ணியது இல்லை. கட்சியின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு, என் கடமையை ஆற்றி வந்திருக்கிறேன்.
எம்ஜிஆரால் ஆரம்பிக்கப்பட்ட அதிமுக இன்று அதிமுகவாக இல்லை. தொண்டர்கள் தான் தலைமையை தேர்ந்து எடுக்க வேண்டும் என்ற எம்ஜிஆரின் திருத்தக்கூடாத விதி திருத்தப்பட்டது. தொண்டர்கள் உரிமை பறிக்கப்பட்டது. ஜெயலலிதா வழிநடத்திய அதிமுக இன்றைக்கு இல்லை.
தனக்காக தனது பதவியை மட்டுமே குறியாக கொண்ட ஒருவரின் ஒரு சுயநல அரசியலால் எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுக இன்று அபகரிப்பு திமுகவாக மாறியிருக்கிறது. நான் எப்படி எல்லாம் பழிவாங்கப்பட்டேன் என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும்.
என்னை, அன்போடு அழைத்து, பண்போடு பாசம் காட்டி, அரவணைப்பை எனக்கும் என்னை சார்ந்தவர்களுக்கு வழங்கி உள்ளார் முதல்வர் ஸ்டாலின். சட்டத்தை வளைத்து திட்டம் போடலாம், கழக சட்ட விதியை மாற்றி வட்டமும் போடலாம், தொண்டர்களின் உரிமையை பறித்துவிட்டு தொண்டை கிழிய கத்தலாம், கட்சியையும் கைப்பற்றலாம். ஆனால் வெற்றி பெற முடியுமா என்றால் இல்லை.
தொடர் தோல்விகள் தானே தொடர்கதையாக, அங்கே இருக்கிற சுயநலம் பிடித்த அகம்பாவம் பிடித்தவர்களுக்கு அங்கே இருக்கிறது. இனியும் அவர்களின் தோல்வி அங்கே தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். 8 தோல்வி, 10 தோல்வி அல்ல… இனி அவர்கள் வாழ்நாள் எல்லாம் தோல்வியை தான் காணப்போகிறார்கள்.
இனியும் அதில் பயணிப்பது தன்மானத்திற்கு கேடானது, திராவிடத்திற்கு மாறானது என்பதை உணர்ந்து தான் 75 ஆண்டுக்கு மேலாக திராவிட சித்தாந்தத்தையும், சமூக நீதியையும் தடம்புரளாமல் காத்து வரும் திமுக, அதை வழிநடத்தும் முதல்வர் ஸ்டாலின் தலைமையை ஏற்று தாய் கழகத்தில் ஒரு தொண்டனாக தான் இணைத்துக் கொண்டு இருக்கிறேன்.
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தை அண்ணாதுரை கண்ட திமுகவில் இணைப்பதை நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தாய் கழகத்தில் இணைந்ததை பெருமையாக கூறி கொள்கிறேன்.
தமிழகத்தில் தேசியம் என்ற பெயரில் மதவாத அரசியல் என்பது வெறும் பேச்சு. வெற்று பேச்சு. இன்று இங்கு எப்போதுமே திராவிடம் தான் என்பது நமது உயிர்மூச்சு. நம் இணைப்பு சிலருக்கு வெறுப்பை தந்திருக்கிறது. சிலரின் தூக்கத்தையும் கெடுத்து இருக்கிறது.
எதிர் அணியின் வெற்றி வாய்ப்பை முற்றிலுமாக தடுத்திருக்கிறார். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என்ற சொல்லை நடைமுறைப்படுத்தியவர், பதறாத பண்பாளர், சிதறாத சிந்தனையாளர், கட்சியை மட்டுமல்ல, ஆட்சியை வழிநடத்துவதிலும் சரி, ஸ்டாலினை போல ஒரு பக்குவப்பட்ட தலைவர் இனி இந்தியாவில் இல்லை.
இந்த 5 ஆண்டுகால ஸ்டாலின் ஆட்சியில் அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் சுகாதாரம், மாதம்தோறும் உதவித்தொகை, வேலைவாய்ப்புகள் மூலம் தமிழகம் இன்று தலைநிமிர்ந்து நிற்கிறது. ஒட்டுமொத்த தமிழகமே உங்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்தும்.
,இவ்வாறு ஓபிஎஸ் பேசினார்.
