ஈரோடு: ”தி.மு.க., தான் எங்களுக்கு எதிரி; அ.தி.மு.க., ஒரு கட்சியே இல்லை,” என. த.வெ.க., நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கூறினார்.
த,வெ.க., மூன்றாமாண்டு துவக்க விழாவையொட்டி, ஈரோடு மாவட்டம் நம்பியூர் யூனியன் கோசணத்தில், கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். அப்போது, செங்கோட்டையன் கூறியதாவது:
கரூர் சம்பவத்தை சொல்லி, விஜயை முன்னாள் முதல்வர் பழனிசாமி விமர்சிக்கிறார். துாத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை பிரச்னையில், 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டபோது, முதல்வராக இருந்த பழனிசாமி, அங்கு ஏன் செல்லவில்லை?
எங்களை பொறுத்தவரை, எதிரி யார் என்று கேட்டால், தி.மு.க., தான் எங்களுக்கு எதிரி. அ.தி.மு.க., என்பது, தே.ஜ., கூட்டணியில் உள்ள பத்து கட்சிகளில் ஒன்று. அதனால் அ.தி.மு.க., என்பது ஒரு கட்சியே இல்லை.
த.வெ.க., சார்பில், தேர்தலில் போட்டியிட ஒரே நாளில், 10 ஆயிரம் பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். அதே சமயம், 15 ஆயிரம் பேர், மனு கிடைக்காமல் திரும்பி சென்றுள்ளனர். இனி ஆன்லைனில்தான் விருப்ப மனு செய்ய வேண்டிய நிலை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
