அது மட்டும் நடந்தால் தேர்தலில் இருந்து விலகி விடுவேன்; சீமான் சவால்

நாகர்கோவில்: ‘மொழி சிதைந்து, அழிந்து போவதைப்பற்றி காங்கிரசும், பாஜவும், கவலைப்படும் என்று சொன்னால், நான் தேர்தலில் இருந்து விலகி விடுகிறேன்,’ என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

கிள்ளியூர் தொகுதி பிரசாரத்தில் அவர் பேசியதாவது; இந்தியாவிலேயே அதிக கல்வியறிவு பெற்ற மாநிலம் கேரளா. தமிழகத்தில் கல்வியறிவு பெற்ற மாநிலம் கன்னியாகுமரி என்கிறார்கள். ஆனால், இந்த மாவட்டத்தில் இருந்து எந்த புதிய சிந்தனையும், ஆற்றலும், மாறுதல்களும் வரவில்லை. கற்றறிந்த மக்கள் நம்மில் இருந்து தான் மாறுதல்கள் ஏற்பட்டிருக்க வேண்டும்.

விலகி விடுகிறேன்?

அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக அதிமுக, திமுக, காங்கிரஸ் கட்சிகளின் தத்துவங்கள், கோட்பாடுகளை ஏற்று வாழ்ந்து வந்திருகிறோம். இதில், ஏதாவது ஒரு பிரச்னை தீர்க்கப்பட்டுள்ளதா? இந்தக் காங்கிரஸ், பாஜ கட்சிகள் தமிழகத்திற்கு எதற்கு? ஒவ்வொரு மொழியை அடிப்படையாகக் கொண்டவர்கள், அவரவர் மாநிலத்தை ஆளட்டும். இந்தியாவை சுழற்சி முறையில் ஆள்வோம்.

இந்த நாட்டை 3 முறை ஒரே மாநிலத்தவரான பிரதமர் மோடி ஆள்கிறார். இந்த நாட்டின் முதன்மை பதவியை குஜராத்திகளான மோடியும், அமித்ஷாவும் வகிக்கிறார்கள். தொல்காப்பியம் பிறந்த ஊரில் மொழி சிதைந்து, அழிந்து போனது. இதைப்பற்றி காங்கிரசும், பாஜவும் கவலைப்படும் என்று சொன்னால், நான் தேர்தலில் இருந்து விலகி விடுகிறேன்.

துண்டிக்க முடியாதா?

கொடுத்து கொடுத்து வாழ்ந்த, அரிசிக்கும், பருப்புக்கும் கையேந்துகிறாய், இலவசத்திற்கு ஏங்குகிறாய். இதற்காக இந்தப் பயல்களை ஒழிக்க வேண்டாமா? எதற்கு காங்கிரஸ், கச்சத்தீவை எடுத்துக் கொடுத்ததால், எல்லைத் தாண்டி வந்ததாக 800க்கும் மேற்பட்ட மீனவர்களை சுட்டுக் கொன்று விட்டார்கள். கேரள மீனவன் எல்லைத் தாண்டி சென்றால் ஏன் சுடுவதில்லை?

ஏனெனில், மான மலையாளி மண்ணை ஆள்கிறான். தொட்டால், கொல்வான். ஒரு சிறிய நாடு இலங்கை. உன் நாட்டு மீனவனை சுட்டால் தொலைத்து விடுவேன் என்று சொல்ல முடியாதா? அந்த நாட்டு மீது வர்த்தக, தொழில் ஒப்பந்தத்தை துண்டிக்க முடியாதா? என்னை முதல்வர் நாற்காலியில் உட்கார வை. ஒரு தமிழனை சுட்டால், நான் பதவியை ராஜினாமா செய்து விட்டு செல்வேன். மீனவர்களை வைத்தே நெய்தல் படையை உருவாக்குவேன்.

முதல்வர் பதவி கொடுங்க

மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 கொடுத்தாங்க. ஒரு நாளைக்கு ரூ.30. என் ஆத்தாளுக்கு வக்கில்ல. ஒரு 3 வருஷம் கொடுத்தாங்க. ஆட்சி முடிந்துவிட்டது. அடுத்து ஆட்சிக்கு வந்தால் ரூ.2000. வளர்ச்சி வந்திடுச்சு. மாணவ, மாணவிகளுக்கு ரூ.1000 தராங்க. 3 வருஷத்துக்கு அப்புறம் அதுவும் முடிந்தது. அதற்கு பதிலாக வேலை கொடுக்க வேண்டும்.

முதல்வர் பதவிக்கு வந்து எப்படியாவது என் நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று ரொம்ப கஷ்டப்படுகிறேன். மொத்த ரூ.8000 கூப்பனையும் வைத்துக் கொண்டு முதல்வர் பதவியை மட்டும் எனக்கு கொடுத்திடுங்கள். டாஸ்மாக்கில் சரக்கடித்து 25 லட்சம் பேரின் உயிரை வாங்கிட்டாங்க. அதை திரும்ப கொடுத்திருங்க. கேவலம். இவரு ரூ.8,000. இபிஎஸ் வந்து ரூ.10,000 மற்றும் பிரிட்ஜ். இந்த இலவசத்திற்கான பணத்தை எங்கிருந்து வரும் என்று ஏன் கேள்வி கேட்க மாட்டீங்க.

5வது தலைநகரம்

கன்னியாகுமரியை 5வது தலைநகராக உருவாக்குவேன். சென்னையில் கிடைக்கும் அனைத்தையும் இங்கே கிடைக்க வழிவகை செய்வேன். மதுரை, கோவை, திருச்சி, சென்னை என 5 தலைநகரங்கள். இதைக் கேட்டதும் சிரித்தார்கள். ஸ்டாலின் 5 நகரங்களை உருவாக்குவேன் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்துள்ளார், இவ்வாறு அவர் கூறினார்.

Source link