அனிமேஷன், கார்ட்டூன் துறையில் 1 லட்சம் வேலை உருவாக்க திட்டம் புதிய கொள்கையை வெளியிட்டார் முதல்வர்

சென்னை:’அனிமேஷன், ஆன்லைன் விளையாட்டு, கார்ட்டூன் துறையில், ஒரு லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்’ என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில், 2026ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அனிமேஷன், காட்சிப்படுத்தல், விளையாட்டு, கார்ட்டூன், விரிவாக்கப்பட்ட மெய்நிகர் கொள்கையை, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

அதன் விபரம்:

தமிழகத்தை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர், அதாவது 90 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரமாக மாற்றும் இலக்கை அடையும் வகையில், நாட்டின் அனிமேஷன், காட்சிப்படுத்தல், விளையாட்டு, கார்ட்டூன், விரிவாக்கப்பட்ட மெய்நிகர் சந்தையில், 20 சதவீத பங்கை பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வரும் 2030க்குள், ஒரு லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், இந்த கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. சென்னையில், ‘எல்காட் வியன்’ சிறப்பு திறன் மையமும், கோவை, திருச்சி, மதுரை, சேலம், நெல்லையில், அதன் துணை மையங்களும் அமைக்கப்படும். கட்டமைப்பு வசதிகள் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் அமைக்கப்பட்டு பரவலான தொழில் வளர்ச்சி ஊக்குவிக்கப்படும்.

300 முதல் 400 கல்லுாரிகளில் அனிமேஷன், காட்சிப்படுத்தல், விளையாட்டு, கார்ட்டூன், விரிவாக்கப்பட்ட மெய்நிகர் ‘பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக, ‘மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உலக தரத்திலான பயிற்சி, கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அனிமேஷன், காட்சிப்படுத்தல், விளையாட்டு, கார்ட்டூன் சந்தையில், 20% பங்கை தமிழகம் பெற இலக்கு

சென்னையில் சிறப்பு திறன் மையம், கோவை, திருச்சி, மதுரை, சேலம், நெல்லையில், துணை மையங்கள் அமைக்கப்படும்

Source link