“அனிருத் நடிக்க வேண்டிய படம்…” – சுவாரஸ்யம் பகிர்ந்த ஆர்.ஜே.பாலாஜி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’. இப்படத்தில் க்ரித்தி ஷெட்டி கதாநாயகியாகவும் எஸ்.ஜே. சூர்யா, மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். மேலும் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரதீப் ரங்கநாதனுக்கு அப்பா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

லலித் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஹைதராபாத்தை தொடர்ந்து சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய ஆர்.ஜே.பாலாஜி, “விக்னேஷ் சிவன் ஒரு லக்கி பாய் தான். நிறைய பேருக்கு அவரை பிடிக்கும். நயன்தாராவுக்கும் பிடிக்கும். நானும் ரௌடி தான் படத்தில் தான் இரண்டு பேரும் கை கோர்த்தார்கள். அதை நான் பக்கத்தில் இருந்து பார்த்தேன். என் முன்னால் தான் அந்த காதல் கதை படிப்படியாக டெவலப் ஆனது. முதலில் விக்னேஷ் சிவன், நயன்தாரா அவரை காதலிப்பதாக சொன்ன போது என்னால் நம்ப முடியவில்லை. இதயமே வெடிக்கிற மாதிரி இருந்தது. பின்பு நயன்தாராவிடம் போய் கேட்டேன். அப்போ பார்த்த லவ், இன்னைக்கு வரைக்கும் அதை தொடர்கிறார். 

என்னுடைய எல்கேஜி படத்தில் பிரதீப் ரங்கநாதன் தான் ஒரு டிராஃப்ட் டயலாக் எழுதிக்கொடுத்தார். இப்போது இருக்கும் தமிழ் சினிமாவில் என்னிடம் நீங்க யார் ரசிகர் எனக் கேட்டால், பிரதீப் ரங்கநாதனை சொல்வேன். கருப்பு பட பணியில் இரண்டு வருஷமாக இருந்த போது ரஜினி, விஜய் என நிறைய நடிகர்களின் படங்கள் வந்தது. அவர்கள் படங்களுக்கு ஒரே டீமாக போக ஆசைப்படுவது போல் பிரதீப் ரங்கநாதனின் டியூட் படத்துக்கும் ஆசை வந்தது. அவர் நிறைய இளைஞர்களை கவர்ந்திருக்கிறார். ரொம்ப காலத்துக்கு அவர் ஒரு ஸ்டாராகவே இருப்பார். 

எனக்கும், அனிருத்துக்கும் இந்த படத்துடன் ஒரு சம்பந்தம் இருக்கிறது. இந்தப் படத்தில் ‘ஆக்கோ(AAKKO)’ படத்தில் இருந்து ஒரு பாடலை பயன்படுத்தியிருப்பார்கள். அந்த படத்தில் அனிருத் ஹீரோவாக நடிக்க வேண்டியது. அதில் நானும் அவரோடு இணைந்து நடிக்கவிருந்தேன். அதற்காக நானும் அனிருத்தும் படத்தின் ஃபோட்டோ ஷூட்டுக்காக அவசர அவசரமாக முடியெல்லாம் வெட்டினேன். அந்தப் படத்தின் தயாரிப்பாளர் எங்களைப் பார்த்துவிட்டு 2 லட்ச ரூபாய்க்கு செக்கெல்லாம் எழுதிக்கொடுத்தார். உடனே நான் அந்தப் பணத்தை என் மகன் பிறந்தநாளுக்காகப் பயங்கரமாக செலவு செய்துவிட்டேன். ஆனால் 10 நாள்கள் கழித்து அனிருத் அந்தப் படத்தில் நடிக்க மாட்டேன் என சொல்லிவிட்டார். உடனே பணத்தை திருப்பி கேட்பார்களே என பயன் வந்தது. 

அப்போது 2 லட்ச ரூபாய் என்பது பெரிய பணம். ஆனால் அந்த தயாரிப்பாளர் எனக்கு ஃபோனே பண்ணவில்லை. ஒரு மாசம் கழித்து அதில் பாதி பணத்தை கொடுத்துவிடலாம் என தயாரிப்பாளருக்கு கால் பண்ணேன். அப்போது அனிருத் அந்த பணத்தை கொடுத்துவிட்டதாக சொன்னார். அனிருத்திடம் கேட்டபோது உங்கள் பையனுக்கு என்னுடைய பிறந்தநாள் பரிசாக வைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார். அனிருத்துடைய ‘ஒய் திஸ் கொலைவெறி’ பாட்டு என் ஷோவில் தான் லான்ச் ஆனது. அப்போது இருந்தே அவர் எனக்கு தம்பி மாதிரி. நிறைய தடைகளை கடந்து இந்த படம் ரிலீஸாகிறது. இந்தப் படம் பின்னால் ஒரு பெரிய வலி இருக்கிறது. 4 வருஷம் ஒரு பி.இ. கோர்ஸ் மாதிரி தான் இதை விக்னேஷ் சிவன் செய்திருக்கிறார். எக்ஸாம் எழுதிவிட்டார். ரிசல்ட் 10ஆம் தேதி.  ” என்றார்.

தொடர்ந்து ‘கருப்பு’ படம் குறித்து பேசிய அவர், “விக்னேஷ் சிவன் பி.இ. பன்னியிருப்பது போல் நான் மூன்று வருஷ கோர்ஸ் பி.எஸ்சி பண்ணியிருக்கேன். படம் நன்றாக வந்திருக்கிறது. தமிழ் புத்தாண்டிற்குள் படத்தின் அடுத்த பாடல் வெளியாகும்” என்றார். 

Source link