அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை!: எரிபொருள் நெருக்கடி குறித்து விவாதிக்க திட்டம்

புதுடில்லி: அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள மாநிலங்கள் தவிர, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச முதல்வர்களுடன், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றத்தால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி மற்றும் தயார்நிலை குறித்து அவர்களுடன் பிரதமர் விவாதிக்க உள்ளார்.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள், கடந்த மாதம் 28ம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இதற்கு பதிலடியாக, மேற்காசிய பிராந்தியத்தில் உள்ள சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஈரான் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இதனால், நம் நாட்டில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.

மேற்காசிய போர் சூழலை சமாளிப்பது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை மத்திய அரசு நேற்று முன்தினம் கூட்டியது. இந்த விவகாரத்தில், எதிர்க்கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளும் ஒருமித்த நிலைப்பாட்டை வெளிப்படுத்துவது என அப்போது முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இது தொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச முதல்வர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக இன்று மாலை ஆலோசனை நடத்தவுள்ளார்.

போரால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், மாநில அரசால் எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்தும் அப்போது விவாதிக்கப்பட உள்ளது.

மாநிலங்களின் தயார்நிலை மற்றும் திட்டங்களை ஆய்வு செய்வது குறித்தும் இந்த பேச்சின் போது ஆலோசனை செய்யப்பட உள்ளது. ‘தற்போதைய சூழலில், ‘டீம் இந்தியா’ என்ற ஒரே அணியாக செயல்படுவதை உறுதி செய்ய இந்த ஆலோசனை உதவும்’ என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், அங்குள்ள முதல்வர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள். அங்குள்ள தலைமைச் செயலர்களுடன், மத்திய அமைச்சரவை செயலகம் தனியாக ஒரு கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது-.

Source link