சென்னை: உணவகங்கள், டீக் கடைகள், ‘கிளவுட் கிட்சன்’ எனப்படும் உணவு மட்டும் தயாரிக்கும் சமயைல் அறைகள் உட்பட, அனைத்து வகை உணவகங்களும், எரிவாயுவுக்கு பதிலாக மின் அடுப்புகளை பயன்படுத்தும்போது ஏற்படும் கூடுதல் மின் பயன்பாட்டுக்கு, யூனிட்டுக்கு 2 ரூபாய் மானியம் வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் சூழலால், தமிழகத்தில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு இடர்களை நீக்கி, தொழில் துறை, ஹோட்டல் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் சீராக இயங்குவது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் தலைமையில், சென்னை தலைமை செயலகத்தில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடந்தது.
கூடுதல் செலவு
இதில், தலைமை செயலர் முருகானந்தம் உட்பட பல துறை உயரதிகாரிகள், பொதுத்துறை எண்ணெய் நிறுவன அதிகாரிகள் பங்கேற்றனர்.
பின், மின் வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி:
உணவகங்கள், டீக்கடைகள், ‘கிளவுட் கிட்சன்’ உட்பட அனைத்து வகை உணவகங்களும், எரிவாயுவிற்கு பதிலாக மின் அடுப்பு பயன்படுத்தும்போது, கூடுதல் மின்சாரம் செலவாகும்.
அந்த கூடுதல் மின்சார பயன்பாட்டிற்கு சலுகை அளிக்கும் விதமாக, யூனிட்டுக்கு 2 ரூபாய் மானியம் வழங்க முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்த மானியம், மத்திய அரசு அறிவித்துள்ள வணிக எரிவாயு பயன்பாட்டு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் வரை வழங்கப்படும்.
‘ஏசி’ சாதனத்தால் கூடுதல் செலவு ஏற்பட்டதா; ‘ஹீட்டர்’ பயன்பாட்டால் வந்ததா என்றெல்லாம் பிரித்து பார்க்க மாட் டோம். கூடுதல் செலவுக்கு யூனிட்டுக்கு 2 ரூபாய் மானியம் வழங்கப்படும்.
அதாவது, 100 யூனிட் என்றால், அதற்காக ஏற்கனவே செலுத்திய மின் கட்டணத்தில், யூனிட்டுக்கு 2 ரூபாய் குறைக்கப்படும். பெரிய உணவகம், உரிமம் வாங்கிய உணவகம் மட்டுமல்ல, அனைத்து வகை உணவகங்களுக்கும் இது பொருந்தும்.
எரிவாயு பயன்படுத்தும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் நெருக்கடியை சமாளிக்கும் வகையில், மின் அடுப்புகள், மின் சூடேற்றிகள் உள்ளிட்ட உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்கு, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில், 25 சதவீதம் அதிகபட்சம், 3.75 லட்சம் ரூபாய் வரை மானியத்துடன் கடன் வழங்கப்படும்.
அனுமதி தேவையில்லை
தமிழக மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தில், 2 லட்சம் ரூபாய் மானியத்துடன் 10 லட்சம் ரூபாய் வரையும், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தின் கீழ் 35 சத வீதம், அதிகபட்சம் 1 கோடி ரூபாய் வரை மானியத்துடன் கடன் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில், 60,698 தொழிற்சாலைகள், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற்று, எல்.பி.ஜி., – சி.என்.ஜி., டீசல், பர்னஸ் ஆயில், விறகு போன்றவற்றை எரிபொருளாக பயன்படுத்தி செயல்பட்டு வருகின்றன.
இந்நிறுவனங்கள், அந்த எரிபொருட்களுக்கு மாற்றாக மண்ணெண்ணெய், அதிவேக டீசல், பயோமாஸ் போன்றவற்றை எரிபொருளாக பயன்படுத்தி கொள்ளலாம்.
இதற்கு, மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதியை பெற தேவையில்லை; தகவல் தெரிவித்தால் மட்டும் போதும். இந்த விலக்கு, சிலிண்டர் கட்டுப்பாட்டு காலம் அமலில் இருக்கும் வரை உண்டு.
தமிழகம் முழுதும், 9,300 தொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு தினமும், 55 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, கையாளும் திறன் உள்ளது.
இந்த நெருக்கடி நேரத்தில் மீதமாகும் தேவைக்கு அதிகமான பாலை, ஆவின்
பால் கூட்டுறவு சங்கங்களில் கட்டுப்பாடு ஏதுமின்றி வாங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
எரிவாயு பற்றாக்குறையால் உணவகங்கள் மூடப்படும் வேளையில், விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் காய்கறி விற்பனை பாதிக்கப்படலாம். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் வைத்து, விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகள், பழங்களை, இடர்பாடின்றி, 194 உழவர் சந்தைகளில் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் விற்கலாம்.
மாநில அளவில், வணிக நிறுவனங்களுக்கு முறையாக எரிவாயு சிலிண்டர்கள் ஒதுக்கீடு செய்து கண்காணிக்க, தலைமைச் செயலர் தலைமையில், அரசு உயரதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட உள்ளது.
மேலும், மாவட்ட அளவில் எண்ணெய் நிறுவன அதிகாரிகளை உள்ளடக்கி, கலெக்டர் தலைமையில் குழு அமைத்து கண்காணிக்கவும், முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இம்மாதம், பொது வினியோக திட்டத்திற்கு கூடுதலாக, 32.28 லட்சம் லிட்டர் மண்ணெண்ணெய் ரேஷனில் வழங்க ஆணையிடப்பட்டு உள்ளது. வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். பதுக்கலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கான தமிழக ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை கூறியதாவது:
தமிழகம் முழுதும் உள்ள எண்ணெய் நிறுவனங்களின் முனையங்களில், ஒன்பது நாட்களுக்கான பெட்ரோல், டீசல் கையிருப்பு இருக்கிறது; வரத்தும் தொடர்கிறது.
பெட்ரோல், டீசலுக்கு எவ்வித தடையும் இருக்காது. கடந்த சில தினங்களில் பங்க்குகளில் அதிகளவில் பெட்ரோல் போட்டனர். இதனால், ஒரே நாளில் பெட்ரோல் விற்பனை 100 சதவீதம், டீசல் விற்பனை 75 சதவீதம் அதிகரித்து விட்டது.
அவற்றின் விற்பனை நேற்று முன்தினம் குறைந்துள்ளது. முழு அளவில் கையிருப்பு உள்ளதால், யாரும் அச்சப்பட தேவையில்லை. இம்மாதம் இறுதி வரை சிலிண்டர் இருப்பு உள்ளது.
வணிக பிரிவுகளுக்கு 20 சதவீதம் வழங்கலாம் என்றும், அதிலும் முன்னுரிமையாக மருத்துவமனைகள், மாணவர் விடுதிகளுக்கு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
