அபுதாபி:ஈரானின் ஏவுகணை தாக்குதலால், யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்சின் எரிசக்தி உட்கட்டமைப்பின் முக்கிய துாணான ஹப்ஷான் எரிவாயு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான், மேற்காசிய நாடுகளில் உள்ள அதன் ராணுவ தளங்களை குறிவைத்து தாக்கி வருகிறது. அந்த வகையில், ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபியை நோக்கி ஈரான் வீசிய ஏவுகணை ஒன்றை, அந்நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து தாக்கின.
இதில், ஏவுகணையின் பாகங்கள் ஹப்ஷான் எரிவாயு நிலையத்தின் பதப்படுத்தும் தளத்தில் விழுந்தன. இதனால் அங்கு தீ விபத்து ஏற்பட்டதால், அனைத்து செயல்பாடுகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
அபுதாபியில் அமைந்துள்ள ஹப்ஷான் எரிவாயு நிலையம், ஐக்கிய அரபு எமிரேட்சின் முக்கிய எரிவாயு மற்றும் எண்ணெய் உற்பத்தி மையமாகும். அங்கு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதால், மேற்காசி நாடுகளின் எரிசக்தி வினியோகத்தில் முடக்கம் ஏற்பட்டுள்ளது.
