தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால் திமுக, அதிமுக, நாதக, தவெக என அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம், தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை என தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் அதிமுக – பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அன்புமணி தலைமையிலான பா.ம.க, அமமுக, தமாக, இந்திய ஜனநாயக கட்சி போன்ற கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது குறித்து பா.ஜ.கவிடம் அதிமுக தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது. அந்த வகையில், கடந்த 19ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது பா.ம.க, அமமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட வேண்டிய தொகுதிகள், தேர்தல் பிரச்சாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த சந்திப்பை முடித்து எடப்பாடி பழனிசாமி நேற்று காலை மீண்டும் சென்னைக்கு வருகைத் தந்தார். அதனை தொடர்ந்து, நேற்று (20-03-26) மாலை பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், அ.ம.மு.க. பொதுச்செயலர் டி.டி.வி. தினகரன் ஆகியோர் டெல்லிக்கு சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினர். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை என்று அதிமுக தலைவர்கள் தொடர்ந்து கூறி வந்தாலும், கூட்டணி குறித்து முடிவெடுக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அடிக்கடி டெல்லி செல்கிறார். இதனால் கூட்டணிக்கு அதிமுக தலைமையா? அல்லது டெல்லி பா.ஜ.க தலைமையா? என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுகவுக்கு 12 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அமைச்சர் அமித் ஷாவுடனான தொடர் ஆலோசனைக்குப் பிறகு டிடிவி தினகரனுடைய அமமுகவுக்கு 12 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த தேர்தலில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடப் போவதில்லை என அவர் திட்டவட்டமாக தெரிவித்த நிலையில், ஒதுக்கப்பட்ட 12 தொகுதிகளிலும் குக்கர் சின்னத்தில் தான் அமமுக வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
