அமமுகவுக்கு எந்த தொகுதி, எத்தனை இடமென்று எனக்கு தெரியும்.. டெல்லிக்கு செல்லும் காரணமே வேற.. டிடிவி தினகரன் அதிரடி – did not go to delhi to talk about seat sharing said ttv dhinakaran

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்றைய தினம் டெல்லிக்கு சென்றார். இதனை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்தார். இந்நிலையில் தற்போது அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டெல்லி செல்கிறார். இதனையடுத்து தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்காக டெல்லிக்கு செல்லவில்லை என செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார் டிடிவி தினகரன்.

டிடிவி தினகரன்
தமிழக சட்டப்பேரவை தேர்தல் பரபரப்பு அதிகரித்துள்ள நிலையில், நேற்றைய தினம் டெல்லிக்கு கிளம்பி சென்றார் எடப்பாடி பழனிசாமி. தொகுதி பங்கீடு சம்பந்தமாக பேசுவதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்தார். இதனையடுத்து டிடிவி தினகரன், அன்புமணி ஆகியோரும் டெல்லிக்கு செல்ல உள்ளனர். இந்நிலையில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு டெல்லியில் வைத்து தொகுதி பங்கீடு செய்யப்படுவதாக அரசியல் களத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

டிடிவி தினகரன் டெல்லி பயணம்

இபிஎஸ் டெல்லி சென்று தமிழ்நாடு திரும்பியுள்ள நிலையில், அவரை தொடர்ந்து அமமுகவை சார்ந்த டிடிவி தினகரன் டெல்லிக்கு செல்கிறார். அவரும் தொகுதி பங்கீடு சம்பந்தமாக அமித்ஷாவை சந்தித்து பேசவிருக்கிறார். இதனையடுத்து இன்னும் சில தினங்களில் என்டிஏ கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்காக சீட் குறித்தான எண்ணிக்கை தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமித்ஷாவின் அழைப்பு
இந்நிலையில் டெல்லி செல்வதற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிடிவி தினகரன், “எந்தெந்த தொகுதி. எத்தனை இடம் என்பது பற்றி எனக்கு தெரியும். என்டிஏ கூட்டணி யின் தமிழ்நாடு தலைவர் எடப்பாடி பழனிசாமி தான். அமித்ஷாவின் அழைப்பின் பேரில் தான் டெல்லிக்கு செல்கிறேன். தொகுதி பங்கீடு சம்பந்தமாக பேசுவதற்காக செல்லவில்லை. அங்கு என்டிஏ கூட்டணி தலைவர்களை சந்திக்க உள்ளேன். தேசிய ஜனநாயகக் கட்சி கூட்டணியின் அகில இந்திய தலைமை பாஜக தான்.
முதலமைச்சருக்கு செய்தி
என்டிஏ கூட்டணி VS திமுக கூட்டணி என்பதுதான் கள நிலவரம். அதே போல் தமிழ்நாட்டில் பாஜக, அதிமுக தலைமையிலான கூட்டணியில் தான் இடம்பெற்றுள்ளது. தேசய ஜனநாயகக் கூட்டணி என்பது பாஜக தலைமையிலான கூட்டணி. இதனை உங்களின் வாயிலாக முதலமைச்சருக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
குக்கர் சின்னம்
மேலும், குக்கர் சின்னத்தில் தான் அமமுக போட்டி போடும். இன்னும் நான்கு தினங்களில் தொகுதி பங்கீடு சம்பந்தமான முடிவுகள் சுமூகமாக எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இதனிடையில் இபிஎஸ் டெல்லி பயணம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சில கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இந்தத் தேர்தல் களம் தமிழ்நாடு VS டெல்லி என்பதை முன்வைத்துதான் என்று நாம் சொல்வதை நிரூபிப்பது போன்று, டெல்லியில் இருந்துதான் எல்லா விதமான முடிவும் செய்யப்படுகிறது.
எதிர்க்கட்சித் தலைவரும் அவருடைய சகாக்களும் டெல்லியில் இருப்பது எதற்காக? தமிழ்நாட்டிற்கு வழங்கப்படாமல் வஞ்சிக்கப்படும் நிதியை பெற்று தருவதற்காகவா? தமிழ்நாட்டில் நிறைவேற்றப்படாமல் முடக்கப்பட்டிருக்கும் திட்டங்கள் குறித்து பேசி நிறைவேற்று தருமாறு வலியுறுத்துவதற்காகவா? அல்லது மாநில உரிமைகளைக் காப்பாதற்காகவா? சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டைப் போக்குவதற்காகவா? இல்லை. இல்லை. இல்லவே இல்லை.
டெல்லியின் சம்மதம்
தமிழ்நாட்டில் உள்ள வீடுகளில் அடுப்பு எரிந்தால் என்ன, எரியாவிட்டால் என்ன என்கின்ற மனநிலையில் தான், தங்களது கூட்டணிப் பேச்சுவார்த்தையை எதிர்க்கட்சியினர் நடத்தி வருகிறார்கள். டெல்லியின் சம்மதம் இருந்தால் மட்டுமே தேர்தல் களத்தைச் சந்திக்க வேண்டும் என்ற நிலையில் உள்ளவர்களின் கைகளில் தமிழ்நாடு சிக்கினால், ஒவ்வொரு நாளும் தமிழ்நாடு என்ன பாடுபட வேண்டியிருக்கும் என்பதை தமிழ் மக்கள் உணர்ந்துள்ளார்கள்.
ஒருபோதும் டெல்லியின் ஆதிக்கத்தையும், அதன் அடிமைக் கூட்டத்தையும் தமிழ் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். சொந்தக் கட்சியை தங்களின் சுயநலனுக்காக அடமானம் வைத்துள்ளதை போன்று, அவர்கள் டெல்லியிடம் தமிழ்நாட்டை அடகு வைக்கத் தயங்காதவர்கள். இதனை மக்கள் அறிவார்கள். இனி டெல்லி எடுக்கும் முடிவுதான், எதிர்க்கட்சியினரின் முடிவு என்பதையும் மக்கள் உணர்ந்தே இருக்கிறார்கள். இவ்வாறு முதல்வர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.