அமராவதி: பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய 12 பேரை, பல்வேறு மாநிலங்களில் தேடுதல் வேட்டை நடத்தி, ஆந்திர போலீசார் கைது செய்தனர்.
சமூக வலைதளங்களில் பயங்கரவாத கருத்துகளை பரப்பியதுடன் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த மூவரை, ஆந்திர போலீசார் கைது செய்தனர். இவர்கள் விஜயவாடாவை சேர்ந்த முகமது ரஹ்மத்துல்லா ஷரீப், மிர்ஷா சோகைல் பெக், முகமது தனிஷ் என அடையாளம் காணப்பட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மேலும் சிலருடன் இணைந்து ‘அல் மாலிக் இஸ்லாமிக் யூத்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, இந்தியாவில் உள்ள அல்குவைதா, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பினருடன் அவர்கள் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.
இதில் ரஹ்மத்துல்லா, வெளிநாட்டை சேர்ந்த அல்-ஹக்கீம் ஷுகூர் என்ற பயங்கரவாத அமைப்பின் ஒருங்கிணைப்பாளருடன் சமூக ஊடகங்கள் வாயிலாக தொடர்பில் இருந்தது தெரியவந்தது. பீஹார் மற்றும் ஹைதராபாதை சேர்ந்தவர்களுடன் இணைந்து செயல்பட்டதும் கண்டு பிடிக்கப்பட்டது.
இதையடுத்து, பீஹார், டில்லி, கர்நாடகா, மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம், தெலுங்கானா, ராஜஸ்தான் மாநிலங்களில் ஆந்திர போலீசார் சிறப்பு குழு தேடுதல் வேட்டை நடத்தி, மேலும் 9 பேரை கைது செய்தது. இதனால் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பிடிபட்ட நபர்கள் ஐ.எஸ்., அமைப்பை சார்ந்த, ‘பெனக்ஸ்காம்’ குழுவினருடன் தொடர்பில் இருந்தவர்கள். இதில் பீஹாரை சேர்ந்த அஜ்மனுல்லா கான், டில்லியை சேர்ந்த லக்கி அஹ்மது, மேற்கு வங்கத்தின் மிர் ஆசிப் அலி, ராஜஸ்தானின் ஜீஷான், கர்நாடகாவின் அப்துல் சலாம், மஹாராஷ்டிராவின் ஷாருக் கான், ஷியாக் பியாஷ் உர் ரஹ்மான் ஆகியோர் பயங்கரவாத அமைப்புக்கு இளைஞர்களை சேர்க்க சமூக ஊடகத்தை பயன்படுத்திஉள்ளனர். பயங்கரவாத பயிற்சியில் ஈடுபடுவதற்காக பாகிஸ்தானுக்கு செல்லவும் திட்டமிட்டு இருந்தனர்.இவ்வாறு அவர் கூறினார்.
