அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து ஷங்கர் தொடுத்த வழக்கு

ரஜினிகாந்த் – ஷங்கர் கூட்டணியில் 2010ஆம் ஆண்டு வெளியான ‘எந்திரன்’ படம் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியது. நக்கீரன் முதன்மைத் துணை ஆசிரியரும் எழுத்தாளருமான ஆரூர் தமிழ்நாடன், தனது ‘ஜூகிபா’ கதையை திருடி எந்திரன் படம் எடுத்துள்ளதாக எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதை எதிர்த்து ஷங்கர் தரப்பு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அதனை விசாரித்த நீதிமன்றம் ஜூகிபா கதைக்கும் எந்திரன் படத்துக்கும் பல ஒற்றுமைகள் இருப்பதாக தெரிவித்திருந்தது. 

இந்த வழக்கு தொடர்பாக, அமலாக்கத்துறை ஷங்கரின் ரூ.10.11 கோடி மதிப்பிலான மூன்று அசையா சொத்துக்களை முடக்கியது. இந்த நடவடிக்கையை எதிர்த்து ஷங்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அது விசாரணைக்கு வந்த போது, இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது நீதிமன்றம். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் சுரேந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது ஷங்கர் தரப்பில், ஆரூர் தமிழ்நாடன் வழக்கை திரும்ப பெற்றுவிட்டதால் அமலாக்கத்துறையின் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அமலாக்கத்துறை தரப்பில், இதற்கு பதில் அளிக்க அவகாசம் கேட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். 

Source link