அமிர்தசரஸ்:பஞ்சாபில் திருமண நிகழ்வில் பங்கேற்ற ஆம் ஆத்மி கட்சியின் கிராமத் தலைவர் ஹர்பிந்தர் சிங் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். மாநிலத்தில் கடந்த ஒன்றரை மாதத்தில் நடந்த 2வது அதிர்ச்சி சம்பவம் இதுவாகும்.
பஞ்சாப் மாநிலம் டர்ன் தரண் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமண நிகழ்வு நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வில் ஆம்ஆத்மி கட்சியை சேர்ந்த கிராமத் தலைவராக உள்ள ஹர்பிந்தர் சிங் நேற்று (பிப்ரவரி 18)கலந்து கொண்டார். இந்த நிலையில் ஹர்பிந்தர் சிங் மீது அங்கு வந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இதி ஹர்பிந்தர் சிங் தலையில் குண்டு பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உறவினர் ஜர்மன்ஜித் சிங் பலத்த காயமடைந்து அமிர்தசரஸில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஹர்பிந்தர் சிங் பஞ்சாப் அமைச்சரின் நெருங்கிய கூட்டாளி ஆவார். இது கடந்த ஒன்றரை மாதங்களில் பஞ்சாபில் நடக்கும் இரண்டாவது கொலை ஆகும்.
கனடாவைச் சேர்ந்த லக்பீர் சிங் லண்டா தலைமையிலான லண்டா ஹரிகே கும்பல் இந்தக் கொலைக்கு பொறுப்பேற்றுள்ளது.
2024 ஆம் ஆண்டில் சுக்விந்தர் நோனி என்பவருக்கு எதிராக ஹர்பிந்தர் சிங் அளித்த பணம் பறித்தல் புகார் காரணமாக இந்தப் பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்தக் கும்பல் தெரிவித்துள்ளது.
மக்கள் நடமாட்டம் மிகுந்த திருமண மண்டபங்களில் ஏ.கே.-47 போன்ற நவீன ஆயுதங்களைச் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்துவது பொதுமக்களிடையே பீதியை உருவாக்கியுள்ளது.இந்தச் சம்பவங்கள் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதைக் காட்டுவதாகக் கூறி எதிர்க்கட்சிகள் அரசை விமர்சித்து வருகின்றன.
