“அமீர் தனது கருத்த திரும்ப பெற வேண்டும்”

தவெக தலைவர் விஜய்யின் கடைசிப் படமான ‘ஜன நாயகன்’ சிபிஎஃப்சி-யிடம் சிக்கி பெரும் பிரச்சனையை சந்தித்தது. படத் தயாரிப்பு நிறுவனம் உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் சென்றும் பலன் கிடைக்கவில்லை. சிபிஎஃப்சி-யும் விடாமல் முட்டுக்கட்டை போட்டது. இறுதியில் படக்குழு வழக்கை வாபஸ் பெற்று மறு சான்றிதழுக்கு சிபிஎஃப்சி-யிடம் சமர்பித்தது. படம் பார்த்த சிபிஎஃப்சி தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால் இது தொடர்பாக தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என பரிந்துரைத்தது. ஆனால் அதன்பிறகு எந்த தகவலும் வெளியாகவில்லை. ஜனவரி 9ஆம் தேதி வெளியாகவிருந்த இப்படம் தொடர் தாமதமாகி வந்ததால் வெளிநாட்டு உரிமை, ஓடிடி உரிமை என பல வியாபரங்கள் பாதிக்கப்பட்டது.

இந்த சூழலில் ஜன நாயகன் படத்தின் 5 நிமிட காட்சிகள் சமீபத்தில் இணையத்தில் கசிந்தது. பின்பு மொத்த படமும் வெளியானது. இதனால் படக்குழுவினரும் விஜய் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் அந்நிறுவனத்தின் சட்ட ஆலோசகர், விஜயன் சுப்ரமணியன் படத்தை கசிய விட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டிருந்தார். மேலும் படத்தை பதிவிறக்கம் செய்வதோ, அனுப்புவதோ, சேமிப்பதோ இதுபோன்று எது செய்தாலும் சட்டப்படி குற்றம் எனக்கூறி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார். பின்பு படத் தயாரிப்பு நிறுவனமும் அதே எச்சரிக்கையோடு அறிவிக்கை வெளியிட்டது. இந்த சட்டவிரோதமான நடவடிக்கையை கண்டித்து பல திரைபிரபலங்கள், சங்கங்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து சிபிஎஃப்சி (மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம்) அளித்துள்ள விளக்கத்தில், தாங்கள் தான் படத்தை கசியவிட்டதாக கூறும் செய்தி முற்றிலும் ஆதாரமற்றவை மற்றும் தவறானவை எனக் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக 6 பேரை தமிழ்நாடு சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர். மேலும் மற்ற குற்றவாளிகளையும் கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக ஃபெஃசி தலைவர் ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவருடன் ஃபெஃப்சியில் இருக்கும் எடிட்டர் சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டன. அவர்கள் படக் கசிவுக்கு எடிட்டர் தான் காரணம் என கூறப்படும் தகவலை மறுத்தனர்.

பின்பு இது குறித்து ஆர்.கே.செல்வமணி பேசுகையில், “ஃபிலிமில் இருந்து டிஜிட்டலுக்கு சினிமா மாறியதால் எல்லாமே மாறிப்போய் விட்டது. முன்னதாக ஒரே ஒரு வெர்ஷன் தான் இருக்கும். ஆனால் இப்போது நூறு வேர்ஷன் இருக்கிறது. அதாவது அசிஸ்டண்ட் டைரக்டர் முதல் தயாரிப்பாளர் வரை நிறைய வெர்ஷன் இருக்கிறது. இதில் சவுண்ட் மிக்ஸிங்கே ஆறு இடத்தில் நடக்கிறது. அதனால் இந்த விவகாரம் எங்களுக்கு ஒரு எச்சரிக்கை. இந்த இணையத்திருட்டை அரசாங்கமே தடுத்து நிறுத்த முடியாது போது அதற்கு நாங்கள் பலியாகிவிடுவோம் என்ற பயம் எடிட்டர்ஸ் எல்லாருக்கும் வந்துவிட்டது. அதனால் இனிமேல் எப்படி வேலை செய்வது என்பதை முறைப்படுத்த வேண்டும் என எடிட்டர் சங்கம் கோரிக்கை விடுத்திருக்கின்றது. இதை தயாரிப்பாளர் சங்கத்தோடு பேசி முடிவெடுப்போம். இனிமேல் இது போல் நடக்காதபடியும் பார்த்து கொள்வோம். 

அமீர் சொன்ன கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இப்பட எடிட்டர் பிரதீப் தான் காரணம் என சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுதப்படுகிறது. இதனால் போலீஸ் பிரதீப் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்துகிறது. அவருக்கு திருமணம் நடந்து 6 வருடங்கள் கழித்து இப்போதுதான் அவரது மனைவி கர்ப்பமாக உள்ளார். இந்த சமயத்தில் இப்படி நடப்பது அவர் பயங்கர மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதனால் அமீர், தனது கருத்தை திரும்ப பெற வேண்டுமென  எடிட்டர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. அதனால் அவர் திரும்ப பெற வேண்டும். ஆனால் காவல் துறையினர் இந்த விவகாரத்தை சரியான முறையில் கையாள்கின்றனர். இன்னும் ஒரு வாரத்தில் அவர்கள் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்து விடுவார்கள்” என்றார். 

முன்னதாக அமீர், “கசிந்திருக்கும் ஜனநாயகன் படக் காட்சியிலும் இஸ்லாமியர்கள் தான் பயங்கரவாதிகளா? இது தான் தங்களின் அரசியலா? எப்போது தான் மாறும் இந்த மனநிலை?” என்று தனது வாட்ஸ் அப் பதிவில் பதிவிட்டிருந்தார். இது சர்ச்சையானது. அதாவது கசியவிடப்பட்ட காட்சியை யாரும் பார்க்க வேண்டாம் பகிர வேண்டாம் என திரை பிரபலங்கள் கோரிக்கை வைத்து வந்து நிலையில் அமீர் அக்காட்சி தொடர்பாக விமர்சினம் முன் வைக்கப்பட்டது அவருக்கே சிக்கலாக மாறியது.  

Source link