கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து, இஸ்ரேல் மற்றும் வளைகுடாப்பகுதியில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தியது. இன்று (23-03-26) 24 நாட்கள் கடந்த நிலையிலும், இந்த தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலில் இருதரப்பிலும் மிகப் பெரிய அளவிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, அதிக அளவிலான உயிர்ச் சேதங்கள் மற்றும் பொருளாதார சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த போரில் ஈரானுக்கு எதிராக அதிநவீன ஆயுதங்கள், போர் விமானங்கள் மற்றும் உலகின் மிகப் பெரிய போர்க் கப்பல்களையும் அமெரிக்கா பயன்படுத்தியுள்ளது. இதனால், இதில் அமெரிக்கா மிகப் பெரிய அளவிலான இழப்பைச் சந்தித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில், இந்த போரைத் தொடங்கியதிலிருந்து இதுவரை அமெரிக்கா பல ஆயிரம் கோடிகளைச் செலவழித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், இந்த போரைத் தொடர்ந்து நடத்துவதற்கு மிகப் பெரிய அளவிலான பொருளாதார உதவி தேவையாக இருப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. இதற்கு, அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக, இந்த போரில் அமெரிக்காவின் பொருளாதாரம் தேவையில்லாமல் வீணடிக்கப்படுவதாகப் பொதுமக்கள், எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் கட்சியின் ஒரு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து, அமைச்சர் ஸ்காட் பெசன்ட் கூறுகையில், “ஈரானுக்கு எதிரான போர் நீடித்தாலும், போர் செலவுகளுக்காக பொது மக்கள் மீது கூடுதல் வரிச்சுமைகளை அரசு சுமத்தாது” என்று தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்சத் கூறுகையில், “தற்போதைய மற்றும் எதிர்கால ராணுவ செயல்பாடுகளுக்குக் கூடுதல் நிதி என்பது அவசியம். போரின் தீவிரத்தைப் பொறுத்து இந்த தொகை மாறுபடும்” என்றும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அமெரிக்க அமைச்சர்கள் கூறியுள்ள கருத்துக்களில் இருந்து, ஈரானுக்கு எதிரான இந்த போர் இப்போதைக்கு முடிவிற்கு வர வாய்ப்பில்லை எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
