வாஷிங்டன்: அமெரிக்காவில் இருந்து சமையல் எரிவாயுவான எல்.பி.ஜி.,யை ஏற்றுமதி செய்வது உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து அமெரிக்க எரிசக்தி அமைச்சருடன் நம் வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி ஆலோசனை நடத்தினார்.
நம் வெளியுறவு அமைச்சர் விக்ரம் மிஸ்ரி மூன்று நாள் பயணமாக சமீபத்தில் அமெரிக்கா சென்றார். சுற்றுப்பயணத்தின் இறுதி நாளான நேற்று அமெரிக்க எரிசக்தி அமைச்சர் கிரிஸ் ரைட்டை சந்தித்து பேசினார்.
அணுசக்தி, எல்.பி.ஜி., ஏற்றுமதி, மின் உற்பத்தி, உர தயாரிப்புக்கான நிலக்கரி வாயுவாக்கல் உள்ளிட்ட துறைகளில் இரு நாட்டு எரிசக்தி வர்த்தகத்தை விரிவுபடுத்துதல், ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த சந்திப்பில் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் செர்ஜியோ கோரும் பங்கேற்றார். முன்னதாக புளோரிடாவில் உள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் சொகுசு விடுதியான மார்லாகோவில் மிஸ்ரிக்கு அவர் விருந்தளித்தார்.
விக்ரம் மிஸ்ரியின் அமெரிக்க பயணம் குறித்து செர்ஜியோ கோர் கூறுகையில், “இந்தியாவில் ‘ஷாந்தி’ எனப்படும் அணுசக்தியின் நிலையான பயன்பாடு மற்றும் மேம்பாட்டை உறுதி செய்யும் சட்டம், கடந்த டிசம்பரில் நிறைவேறியது. இது சிவில் அணுசக்தி துறையில் தனியார் பங்கேற்பை அதிகரிப்பதால், இத்துறையில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட அமெரிக்கா தயாராக உள்ளது,” என்றார்.
