புதுடில்லி: அமெரிக்காவில் உயர் கல்வி சேரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 6.9 சதவீதம் குறைந்துள்ளதாக, மத்திய அரசு ராஜ்யசபாவில் தெரிவித்துள்ளது.
நம் நாட்டில் இருந்து பொறியியல், மருத்துவம், ஆராய்ச்சி படிப்புகளுக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் அமெரிக்காவுக்கு சென்றனர். அமெரிக்க அதிபராக டிரம்ப் இரண்டாவது முறை பதவியேற்ற பின், மாணவர் விசா கட்டுப்பாடுகளை கடுமையாக்கினார்.
இந்நிலையில், வெளிநாடுகளில் உயர் கல்வி சேரும் இந்திய மாணவர்கள் குறித்த புள்ளி விபரங்களை, மத்திய வெளியுறவு இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் ராஜ்யசபாவில் நேற்று வெளியிட்டார்.
அதன் விபரம்:
அமெரிக்க உள்துறையின் மாணவர் தகவல் அமைப்பின் தரவுகளின்படி, 2025 பிப்ரவரியில் அமெரிக்காவில் கல்வி பயின்ற இந்திய மாணவர்கள் எண்ணிக்கை 3.78 லட்சமாக இருந்தது.
இந்தாண்டு பிப்ரவரியில் இது, 3.52 லட்சமாக குறைந்துள்ளது. இது, இந்திய மாணவர் சேர்க்கையில் 6.9 சதவீத சரிவை காட்டுகிறது.
அமெரிக்க வெளியுறவு துறை கடந்த ஆண்டு விசா விண்ணப்பங்களை கடுமையாக ஆய்வுக்கு உட்படுத்துவோம் என அறிவித்திருந்தது. அதற்காக விண்ணப்பதாரர்களின் சமூக வலைதளம் உட்பட அனைத்து தகவல்களையும் ஆராய்கிறது. இதனால் , விசா பரிசீலனை தாமதமாகிறது.
விசா வழங்கல் அந்தந்த நாட்டின் அதிகாரம் என்றாலும், இந்திய மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை அமெரிக்க அரசு நிர்வாகத்திடம் தொடர்ந்து எடுத்துரைத்து வருகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
