'அமெரிக்காவுக்கு வரியின்றி ஏற்றுமதி ஆம்பூர் தோலுக்கும் வாய்ப்பு கிடைக்கும்'

சேலம்: ”அமெரிக்காவுடன் ஒரு புது புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாகும்போது, இங்கிருந்து ஜவுளி மட்டுமின்றி; ஆம்பூரில் இருந்து தோல் உள்ளிட்ட கைவினைப் பொருட்களை, வரி இல்லாமல் ஏற்றுமதி செய்யும் வாய்ப்பை விரைவில் உருவாக்குவோம்,” என, துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பேசினார்.

சேலம், பொன்னம்மாபேட்டை, தில்லை நகர் அருகே உள்ள, மத்திய அரசின் இந்திய கைத்தறி தொழில்நுட்ப கல்லுாரியில், புதிதாக கட்டப்பட்ட கல்வி வளாகத்தை, துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், நேற்று திறந்து வைத்தார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது:

கைத்தறி நெசவாளர்கள், அவர்களது பிள்ளைகளின் பயன்பாட்டுக்கு, கல்வி வளாகத்தை திறந்ததில் மகிழ்ச்சி. சேலத்தில் ஜவுளி துறையை காப்பாற்ற, இந்த வளாகம் உதவும்.

இன்றைய சந்ததியினருக்கு, எது தேவையோ அதை தயார் செய்யும் தொழில்நுட்பத்தை நமக்கானதாக்க வேண்டும்.

நெசவு தொழில் நசிவடையாமல் இருக்க, மத்திய அரசு பல்வேறு முயற்சி களை எடுத்து வருகிறது. ஐரோப்பிய நாடுகளுடன் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது.

இதன்மூலம் வங்கதேசம், சீனா நாடுகளுடன், எளிதாக போட்டியிடும் சூழல் உருவாக்கப்பட்டிருக்கிறது. முக்கியமாக சேலத்தில் இருந்து இன்னும் இரு ஆண்டுகளில், ஐரோப்பிய நாடுகளுக்கு ஜவுளி ஏற்றுமதி, 2 மடங்காக உயரும்.

அமெரிக்காவுடன் ஒரு புது புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாகும்போது, இங்கிருந்து ஜவுளி மட்டுமின்றி ஆம்பூரில் இருந்து தோல் உள்ளிட்ட கைவினைப்பொருட்களை, வரி இல்லாமல் ஏற்றுமதி செய்யும் வாய்ப்பை விரைவில் உருவாக்குவோம்.

ஜவுளித்துறையில் புது தொழில்நுட்பத்தை புகுத்த, நெசவாளர்கள் முன் வர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Source link