அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்த பேச்சு ஒத்திவைப்பு! பரஸ்பர வரி விதிப்புக்கு தடையால் திடீர் முடிவு

புதுடில்லி: இந்தியா – அமெரிக்கா இடையேயான இடைக்கால வர்த்தக ஒப்பந்த பேச்சு இன்று துவங்கி மூன்று நாட்கள் நடைபெறுவதாக இருந்த நிலையில், ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுக் கொண்ட டொனால்டு டிரம்ப், வர்த்தக பற்றாக் குறையை காரணம் காட்டி, உலக நாடுகள் மீது பரஸ்பர வரி என்ற பெயரில் அதீத வரிகளை விதித்தார்.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அமெரிக்க உச்ச நீதிமன்றம், பார்லிமென்ட் ஒப்புதல் இல்லாமல் அதிபர் தன் இஷ்டத்துக்கு உலக நாடுகளுக்கு வரி விதிக்க முடியாது எனவும், உலக நாடுகள் மீது விதித்த பரஸ்பர வரி விதிப்பு செல்லாது எனவும் தீர்ப்பளித்தது.

புதிய வரி விதிப்பு

இதற்கிடையே மற்றொரு வரிச்சட்டத்தின் கீழ், இந்தியா உட்பட உலக நாடுகளுக்கு, புதிதாக 15 சதவீத வரியை விதித்தார் டிரம்ப். புதிய வரி விதிப்பு நாளை முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, அமெரிக்கா – இந்தியா வர்த்தக ஒப்பந்த பேச்சு நடந்து வருகிறது.

இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளதால், இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் பாதிக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், ‘அதில் எந்த மாற்றமும் இருக்காது’ என தெரிவித்திருந்தார். ஆனால், இன்று துவங்கி மூன்று நாட்கள் நடைபெறுவதாக இருந்த இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்துக்கான அடுத்த சுற்று பேச்சு, தற்காலிகமாக ஒத்தி வைக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, டிரம்ப் அறிவித்துள்ள புதிய வரி விதிப்பு உள்ளிட்டவை குறித்து இரு நாடுகளும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளதால், இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மத்திய வர்த்தக அமைச்சகத்தின் இணைச் செயலர் தர்பன் ஜெயின் தலைமையிலான இந்தியக் குழு பேச்சில் பங்கேற்க இருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இரு நாடுகளுக்கும் வசதியான மற்றொரு தேதியில் இந்த சந்திப்பு மீண்டும் நடத்தப்படும் என, வர்த்தக அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

காலதாமதம்

இந்த வர்த்தக ஒப்பந்தம் மார்ச்சில் கையெழுத்தாகி ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் என, வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்திருந்தார். தற்போதைய அமெரிக்க வரி மாற்றங்களால், இதில் மேலும் காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்கா, கடந்த 2021 – 25ம் காலகட்டத்தில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக இருந்தது. வழக்கமாக, இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில், 18 சதவீதம் அமெரிக்காவுக்கு செல்கிறது.

கடந்த 2024 – 25ம் நிதியாண்டில் மட்டும் இரு நாடுகளுக்கு இடையே, 16.74 லட்சம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.

பார்லிமென்டை அணுகலாமே?

அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பை அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததில் முக்கிய பங்கு வகித்தவர் இந்திய வம்சாவளி வழக்கறிஞர் நீல் கத்யால். அந்நாட்டு உச்ச நீதிமன்றம் பரஸ்பர வரி விதிப்பை ரத்து செய்த பிறகும், மற்றொரு பிரிவின் கீழ், உலக நாடுகளுக்கு 15 சதவீதம் வரி விதிப்பு உத்தரவை டிரம்ப் பிறப்பித்துள்ளதை க த்யால் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து சமூல வலைதள பதிவில் கத்யால் கூறியதாவது: அதிபர் டிரம்ப் மிகப்பெரிய அளவில் வரி விதிக்க விரும்பினால் அவர் முறைப்படி பார்லிமென்டிற்கு செல்ல வேண்டும். அவரது வரித்திட்டம் அவ்வளவு சிறந்தது என்றால், அதற்கு பார்லிமென்டில் ஒப்புதல் பெறுவதில் அவருக்கு என்ன சிரமம் இருக்க போகிறது? நம் அரசியல்அமைப்பும் அதையே விரும்புகிறது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Source link