அமெரிக்கா இல்லாவிட்டால் நீங்கள் எல்லாம் ஒரு காகிதப் புலி; நேட்டோவை எள்ளி நகையாடிய டிரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்கா இல்லாவிட்டால் நீங்கள் எல்லாம் ஒரு காகிதப் புலி தான் என்று நேட்டோ அமைப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் எள்ளி நகையாடி இருக்கிறார்.

அதிபராக பொறுப்பேற்றது முதல் டிரம்ப்பின் அதிரடிகள் அல்லது அடாவடிகள் வேறு ரகம். அதிலும் 2026ம் ஆண்டு பிறந்தததில் இருந்து தமக்கு ஆகாத அல்லது பிடிக்காத நாடுகள் மீது ஏதேனும் ஒரு பழிசுமத்தி அந்நாடு மீது போர் தொடுத்து வருகிறார். முதலில் வெனிசுலா, அதன் பின்னர் ஈரான் என்று தமது நடவடிக்கைகயை தீவிரப்படுத்தி இருக்கும் டிரம்ப் அடுத்த குறி கியூபா என்று எப்போதோ அறிவித்துவிட்டார்.

தமது இலக்கு என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இல்லாமல் மற்ற நாடுகளுக்கு பரஸ்பரி வரி விதிப்பு, போர் நடவடிக்கை என்று பரபரப்பில் இருக்கும் டிரம்ப். அமெரிக்கா இல்லாவிட்டால் நேட்டோ(அமெரிக்கா தலைமையிலான கூட்டு ராணுவம்) அமைப்பு ஒரு காகிதப் புலி என்று ஏகடியம் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டு உள்ளதாவது;

அமெரிக்கா இல்லையேல் நேட்டோ (NATO) ஒரு ‘காகிதப் புலி. அணு ஆயுத சக்தி பெற முயலும் ஈரானுக்கு எதிரான போரில் அவர்கள் எங்களுடன் இணைய விரும்பவில்லை. இப்போது அந்த போரில் நாங்கள் ராணுவ ரீதியாக வென்றுவிட்டோம்.

கச்சா எண்ணெய்க்காக வலுக்கட்டாயமாக அதிக விலை கொடுக்க இருப்பதாக நேட்டோ அமைப்பு நாடுகள் புலம்புகின்றன. ஆனால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதற்காக எந்த உதவியை செய்ய விரும்பவில்லை.

இந்த உதவியை அவர்கள் மிக எளிய ராணுவ நடவடிக்கை மூலம் எவ்வித ஆபத்தும் இன்றியும் செய்யலாம். ஆனால் கோழைகளே நீங்கள் அப்படி செய்யவில்லை. இதை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம்.

இவ்வாறு டிரம்ப் அந்த பதிவில் கூறி உள்ளார்.

Source link