அமெரிக்கா – ஈரான் இடையேயான பேச்சில் முன்னேற்றம் ஓமன் வெளியுறவு அமைச்சர் பத்ர் அல்புசைதி நம்பிக்கை

ஜெனிவா: அமெரிக்கா – ஈரான் இடையேயான அணுசக்தி திட்டம் குறித்த பேச்சில் ஆக்கப்பூர்வமான மற்றும் நேர்மறையான கருத்துகள் பரிமாறப்பட்டு வருவதால், தற்போதைய பேச்சில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்தியஸ்த நாடான ஓமன் தெரிவித்துள்ளது.

மேற்காசிய நாடான ஈரானுடன் அமெரிக்கா கடந்த 2015ம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன்பின், அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப் அந்த ஒப்பந்தம் பயனற்றது என கூறி அதில் இருந்து வெளியேறினார்.

இதையடுத்து, யுரேனியம் செறிவூட்டலில் ஈரான் இறங்கியது. இதையடுத்து, அந்நாடு அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டு வருவதாக சில சர்வதேச நாடுகள் குற்றஞ்சாட்டி வந்தன.

இந்நிலையில், கடந்தாண்டு ஜனவரியில் அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து, ஈரானுடன் புதிய ஒப்பந்தம் செய்து கொள்ள அமெரிக்கா விரும்புகிறது. இதற்காக ஈரானுக்கு பல்வேறு வகைகளில் டிரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறார்.

எச்சரிக்கை பொருளாதார நெருக்கடி காரணமாக ஈரானில், சமீபத்தில் ஏற்பட்ட மக்கள் போராட்டத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட டிரம்ப், ஈரானுக்கான அழுத்தத்தை மேலும் அதிகரித்துள்ளார்.

போராட்டத்தில் ஈடுபடும் ஈரான் மக்கள் மீது அந்நாட்டு அரசு அடக்குமுறையை ஏவி வருவதாகவும், அப்பாவி மக்கள் கொல்லப்படுவதாகவும் கூறி, அந்நாட்டு கடற்பகுதிக்கு அமெரிக்கா தன் கடற்படை மற்றும் போர்க்கப்பல்களை அனுப்பியுள்ளது.

அமெரிக்காவின் அச்சுறுத்தலையடுத்து, அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பேச்சு நடத்த ஈரான் சம்மதித்தது. இதைத்தொடர்ந்து, இப்பேச்சுக்கு மற்றொரு மேற்காசிய நாடான ஓமன் மத்தியஸ்தம் செய்ய முன்வந்துள்ளது.

இதையடுத்து, இரு நாடுகளும் ஓமன் தலைநகர் மஸ்கட்டில் முதற்கட்ட பேச்சை கடந்த 6ம் தேதி துவங்கின. நேரடி பேச்சை தவிர்த்து, ஓமன் வெளியுறவு அமைச்சர் சையது பத்ர் அல்புசைதியிடம் தங்கள் கருத்துகளை தனித்தனியாக தெரிவித்தனர்.

மேலும், இரண்டாம் கட்ட பேச்சு சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் கடந்த 17ம் தேதி நடந்தது.

இந்நிலையில், மார்ச் மாதம் முதல் வாரத்துக்குள் அணுசக்தி திட்டம் குறித்து இறுதி முடிவெடுக்க கெடு விதித்ததுடன், இல்லாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.

நம்பிக்கை இதைத் தொடர்ந்து, நேற்று மீண்டும் ஜெனிவாவில் மூன்றாம் கட்ட பேச்சு நடந்தது. இப்பேச்சிலும், இரு தரப்பும் தனித்தனியாக ஓமன் வெளியுறவு அமைச்சரிடம் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.

பேச்சு குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ கூறுகையில், “கண்டம் விட்டு கண்டம் பாயும் ஈரானின் ஏவுகணை, அமெரிக்காவை குறிவைத்தே வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பெரிய பிரச்னை. அணுசக்தி திட்டத்திலேயே முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால், ஏவுகணை திட்டம் பற்றி விவாதிப்பது கடினம்,” என்றார்.

ஈரான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் கூறுகையில், “இந்த பேச்சு அணுசக்தி திட்டம் மற்றும் பொருளாதார தடைகளை நீக்குவது குறித்து மட்டுமே இருக்கும்,” என தெளிவுபடுத்தினார்.

இந்நிலையில், ஓமன் வெளியுறவு அமைச்சர் அல்புசைதி கூறுகையில், “இருதரப்பிடையேயான பேச்சில் ஆக்கப்பூர்வமான மற்றும் நேர்மறையான கருத்துகள் பரிமாறப்பட்டு வருவதால் நல்ல முடிவு எட்டப்படும்,” என நம்பிக்கை தெரிவித்தார்.

Source link