அமெரிக்க – இஸ்ரேல் படைகள் தாக்குதலால் தீப்பற்றி எரியும் ஈரான் எண்ணெய் கிணறுகள்

டெஹ்ரான்: முதல்முறையாக ஈரானின் எண்ணெய் உள்கட்டமைப்புகளை குறி வைத்து, இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகள் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தியதில், அங்குள்ள முக்கிய எண்ணெய் கிடங்குகள் தீப்பற்றி எரிகின்றன.

மேற்காசிய நாடான ஈரான் மீது போர் தொடுத்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள், கடந்த ஒன்பது நாட்களாக தாக்குதல் நடத்தி வருகின்றன. போர் துவங்கிய முதல் நாளன்று நடத்தப்பட்ட தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.

அதற்கு பதிலடியாக, மேற்காசியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

மேற்கு ஆசியா பிராந்தியத்தில் நீடித்து வரும், ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல் இலக்குகள் தற்போது மாறியுள்ளதாக செய்தி சேனல் ஒன்று கூறியுள்ளது.

இதன்படி, துவக்கத்தில் ராணுவ மற்றும் அணுசக்தி மையங்கள் தொடர்பான இலக்குகளை மையமாக கொண்டிருந்த தாக்குதல்கள், தற்போது பொருளாதார வளங்களை நோக்கி நகர்ந்துள்ளன.

ஈரான் தலைநகர் டெஹ்ரான் நகரை சுற்றியுள்ள முக்கிய எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலால், உள்நாட்டு எரிபொருள் வினியோகம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

டெஹ்ரான் அருகே உள்ள ஷாஹ்ரேய் பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய டோண்ட்குயான் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், ஷஹ்ரான் பகுதி எண்ணெய் கிடங்குகள், கூகக் மற்றும் கராஜ் – பர்திஸ் பகுதிகளில் உள்ள எண்ணெய் சேமிப்பு நிலையங்கள் மீது நேற்று முன்தினம் இரவு இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

ஈரானின் எரிசக்தி கட்டமைப்பை நேரடியாக குறிவைத்து நடத்தப்பட்ட முதல் பெரிய தாக்குதல் இது. தாக்குதலுக்கு உள்ளான சில எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் தீப்பற்றி எரிந்து வருகின்றன. மேலும், டெஹ்ரான் மற்றும் அல்போர்ஸ் மாகாணங்களில் உள்ள நான்கு முக்கிய எரிபொருள் சேமிப்பு கிடங்குகள் மற்றும் ஒரு பெட்ரோலிய பொருட்கள் போக்குவரத்து மையம் உள்ளிட்டவையும் தகர்க்கப்பட்டன.

டெஹ்ரான் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின், பெட்ரோல், டீசல் மற்றும் ராணுவ பயன்பாட்டு எரிபொருள் விநியோகத்தில் இந்த நிலையங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. தற்போது அங்கு ஏற்பட்டுள்ள சேதம் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகம் தற்காலிகமாக முடங்கியுள்ளது.

இந்த தாக்குதலில், எண்ணெய் கிடங்கு ஊழியர்கள் நான்கு பேரும், பொதுமக்களும் கொல்லப்பட்டதாக ஈரான் நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தாக்குதலுக்கு உள்ளான எரிபொருள் நிலையங்கள், ஈரானிய புரட்சிகர காவல்படையின் ராணுவ வாகனங்கள் மற்றும் ஏவுகணை ஏவு தளங்களை இயக்க பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இத்தாக்குதலினால் ஈரான் ராணுவத்தின் செயல்பாடுகள் கட்டுப்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

மேலும், போக்குவரத்து, மின்சார உற்பத்தி, தொழில் துறை மற்றும் பொதுமக்களின் தேவைக்கான எரிபொருள் கிடைக்காமல் போகவும் வாய்ப்பு உள்ளது. இதனால், அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்படும்.

ஈரானின் எண்ணெய் சேமிப்பு உட்கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேலின் ஹைபாவில் உள்ள அந்நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது, ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலால் இஸ்ரேலுக்கு பெரும் பொருளாதார மற்றும் பாதுகாப்பு இழப்புகள் ஏற்படக்கூடும் என்று கூறப்படுகிறது. இது, இஸ்ரேலின் உள்நாட்டு எரிபொருள் தேவையில், 50 முதல் 60 சதவீதத்தை வழங்கி வருகிறது.

கடந்தாண்டு ஜூனில், ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலின் போதும், இந்த சுத்திகரிப்பு நிலையம் தாக்கப்பட்டது. அப்போது, மூன்று தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அத்துடன், பல மாதங்களுக்கு சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பதிலடி கொடுப்போம்!

”அமெரிக்க, இஸ்ரேலிய தாக்குதலுக்கு வலுவான பதிலடி கொடுப்போம்; சரணடைய மாட்டோம்,” என, ஈரான் அதிபர் மசூத் பெஷெஸ்கியான் தெரிவித்துள்ளார்.
அரசு, ‘டிவி’யில் பேசிய அவர் மேலும் கூறியதாவது: எங்கள் நிலத்தை தாக்க அல்லது ஆக்கிரமிக்க, அண்டை நாடுகள் அல்லது ஏதேனும் ஒரு நாட்டை பயன்படுத்தி தாக்குதல் நடத்த முயன்றால், அந்த தாக்குதலுக்கு நாங்கள் பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அந்நாட்டுடன் எங்களுக்கு தகராறு என்றோ அல்லது அதன் மக்களுக்கு தீங்கிழைக்க வேண்டும் என்றோ பொருளல்ல. நாங்கள் அவசியத்தின் காரணமாகவே பதிலடி கொடுப்போம். அமெரிக்கா – இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு நாங்கள் வலுவாக பதிலளிப்போம்; சரணடைய மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் செய்தி தொடர்பாளர் அலி முகமது நைனி கூறியதாவது: இதுவரை நடைபெற்ற போரில், ஈரானின் முதல் மற்றும் இரண்டாம் தலைமுறை ஏவுகணைகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு உள்ளன. இனி வரும் நாட்களில் மேம்படுத்தப்பட்ட மற்றும் குறைவாக பயன்படுத்தப்பட்ட நீண்ட துார ஏவுகணைகளை பயன்படுத்துவோம். அமெரிக்கா – இஸ்ரேலுக்கு எதிராக, ஈரானிய படைகள் ஆறு மாதங்களுக்கு தீவிர போரை நடத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், ”ஈரானுக்கு எதிரான போரை எங்களின் முழு பலத்துடன் தொடர உள்ளோம். கடந்த வாரம் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரானிய உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்ட பின், ஈரானிய தலைமையையே முற்றிலுமாக ஒழிக்கும் திட்டங்களை இஸ்ரேல் வைத்துள்ளது,” என்றார்.

Source link