வாஷிங்டன்: அமெரிக்க கரன்சியான டாலர் நோட்டுகளில், 165 ஆண்டுகளாக நிதி அமைச்சரின் கையெழுத்தே இடம்பெற்ற நிலையில், அந்நாட்டின், 250வது சுதந்திர தினத்தை ஒட்டி, முதன்முறையாக அதிபரின் கையெழுத்து இடம்பெற உள்ளது.
ஆங்கிலேயரிடம் இருந்து, 1776 ஜூலை 4ல், அமெரிக்கா சுதந்திரம் பெற்றது. அந்நாட்டின், 250வது சுதந்திர விழா இந்தாண்டு பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. இதை குறிக்கும் வகையில், சிறப்பு நாணயங்கள் மற்றும் தபால் தலைகளை வெளியிட அமெரிக்க கலை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
அதில் அதிபர் டிரம்ப் உருவம் பொறித்த, 24 காரட் தங்க நாணயமும் ஒன்று. அதில் டிரம்பின் உருவத்துடன், 1776 – 2026, சுதந்திரம் என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், 250வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, டாலர் நோட்டுகளில் அதிபர் டிரம்பின் கையெழுத்து இடம்பெற உள்ளதாக அமெரிக்க நிதித்துறை பொருளாளர் பிராண்டன் பீச் நேற்று அறிவித்தார்.
இது குறித்து, சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், ‘டாலர் நோட்டுகளில் அதிபரின் கையெழுத்து இடம்பெறுவது வரலாற்றுச் சிறப்புமிக்கது. இந்த முடிவை அமெரிக்க நிதித்துறை எடுத்துள்ளது.
‘அதிபர் டிரம்பின் கையெழுத்துடன், நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட்டின் கையெழுத்தும் இடம்பெறும்’ என குறிப்பிட்டார்.
அமெரிக்காவில், 1861ல் டாலர் நோட்டு அறிமுகமானது. அப்போது முதல், அதில் அமெரிக்க நிதி அமைச்சரின் கையெழுத்தே இடம்பெற்று வந்தது. 165 ஆண்டுகளில் முதன்முறையாக அதிபர் ஒருவரின் கையெழுத்து டாலரில் இடம்பெற உள்ளது.
