வாஷிங்டன்: காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புக்கு சட்ட அங்கீகாரம் வழங்கும், ‘எண்டேஞ்சர்மென்ட் பைண்டிங்’ எனும் தீர்மானத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் ரத்து செய்தார்.
அதிகாரம்
அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, ‘எண்டேஞ்சர்மென்ட் பைண்டிங்’ எனப்படும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் தீர்மானத்தை கடந்த 2009ல் ஏற்றார்.
இதில், காற்றில் வெளியிடப்பட்டு வெப்பத்தை உறிஞ்சி வைக்கும் ‘கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன்’ உள்ளிட்ட ஆறு வாயுக்கள், பொதுமக்கள் ஆரோக்கியத்துக்கும் சூழலுக்கும்ஆபத்தானவை என்பது நிறுவப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் துாய்மையான காற்று சட்டத்தின் கீழ் வாகனங்கள், மின் நிலையங்கள் மற்றும் பல தொழில்துறைகளின் கார்பன் உமிழ்வுகளை கட்டுப்படுத்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.
அவர்கள், உமிழ்வை கட்டுப்படுத்த கடுமையான விதிகளை கொண்டு வந்தனர். இதன் காரணமாக, கார்கள் உள்ளிட்ட வாகனங்களின் உற்பத்தி செலவு பல ஆயிரம் ரூபாய் அதிகரித்தது.
இந்த விதிகள் 2012 முதல் 2027 வரையிலான வாகனங்களுக்கு, 90 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் செலவு வைத்ததாக அரசின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ‘எண்டேஞ்சர்மென்ட் பைண்டிங்’ தீர்மானத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று ரத்து செய்தார்.
சுற்றுச்சூழல்
அப்போது அவர் கூறுகையில், “அமெரிக்க வாகனத் துறைக்கு தீங்கு விளைவித்த ஒபாமா கால கொள்கையை இப்போது அதிகாரப்பூர்வமாக முடித்துவைக்கிறோம்,” என்றார்.இந்த அறிவிப்புக்கு தொழில்துறையினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்த்துள்ளனர்.
‘இந்த முடிவு காலநிலை மாற்றத்தை விரைவுபடுத்தி அதிக மழை, புயல், வெள்ள பாதிப்புகளை ஏற்படுத்தும். காப்பீடு செலவு உயர்வு போன்ற பாதிப்புகளை அதிகரிக்கக்கூடும்’ என, எச்சரித்துள்ளனர்.
ஆரோக்கியம் குறையும்
வாகன உமிழ்வு மற்றும் மின் நிலையங்களின் உமிழ்வை கட்டுப்படுத்தும் விதிகளுக்கு அடித்தளமாக இருந்த, ‘எண்டேஞ்சர்மென்ட் பைண்டிங்’ தீர்மானத்தை ரத்து செய்துள்ளதால் அமெரிக்காவின் சுற்றுச்சூழல்பாதுகாப்பு, அமெரிக்கர்களின் ஆரோக்கியம்,காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறன்ஆகியவை குறையும். குறிப்பிட்ட தொழில்துறையினர் இன்னும் அதிக லாபம் ஈட்டுவதற்காகத்தான்சுற்றுச்சூழல் தீர்மானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-ஒபாமா, அமெரிக்க முன்னாள் அதிபர்
